அரசு விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து மோதல்


அரசு விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து மோதல்
x
தினத்தந்தி 30 Jan 2019 4:30 AM IST (Updated: 30 Jan 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

அரசு விழாவில் ‘எந்த திட்டமும் செயல்படவில்லை’ என்று டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ.வும், ‘மிக்சர் சாப்பிட்டதற்கு ரூ.4½ கோடி கடன் வைத்தவர்கள்’ என்று அனந்தராமன் எம்.எல்.ஏ.வும் கருத்து மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெட்டப்பாக்கம்,

தேசிய பால்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் சார்பில் பால் கூட்டுறவு சங்கத்தினருக்கு பால் கொள்முதல் பரிசோதனை கருவிகள் வழங்கும் விழா கரிக்கலாம்பாக்கத்தில் நடந்தது. அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், டி.பி.ஆர்.செல்வம், தனவேலு, விஜயவேணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. டி.பி.ஆர். செல்வம் பேசும்போது, கிராமப்புறங்களில் இருந்து புதுச்சேரி நகரத்துக்கு வரும் சாலைகள், இந்த அரசில் சரிவர பராமரிக்கப்படாமல் மோசமாக உள்ளது. இப்போதெல்லாம் திருக்கனூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து வருபவர்கள் சாலைகள் மோசமாக இருப்பதால் புதுச்சேரிக்கு வருவதை தவிர்த்து விழுப்புரத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் எந்த திட்டமும் செயல்படவில்லை. எதற்கெடுத்தாலும் கவர்னரை காரணம் காட்டுகிறார்கள் என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், அதற்கு ஆட்சேபனை தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனந்தராமன் ஏதோ கூறினார்.

இந்தநிலையில் டி.பி.ஆர்.செல்வம் பேசியதும் அனந்தராமன் எம்.எல்.ஏ. அவருக்கு பதிலடி கொடுத்து பேசினார்.

அவர் பேசும்போது ‘முதல்-அமைச்சராக நாராயணசாமி பதவி ஏற்றதுமே விவசாயிகள் கடன் ரூ.32 கோடியை தள்ளுபடி செய்து முதல் கையெழுத்து போட்டார். கூட்டுறவு சங்கங்களும், பாப்ஸ்கோ, பாசிக் போன்ற நிறுவனங்கள் நஷ்டமடைந்ததற்கு கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிதான் காரணம். ஒரே தொகுதியில், ஒரே வீட்டில் இருப்பவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களில் ஆள் திணிப்பு நடந்தது. ஒரு பெட்ரோல் பங்க்கில் 25 பேர் வரை வேலையில் அமர்த்தப்பட்டனர்.

இப்படி இருந்தால் எப்படி லாபத்துடன் செயல்பட முடியும்? அதனால்தான் அந்த நிறுவனங்கள் முடங்கின. 5 வருட என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் மிக்சர் சாப்பிட்டதற்கே ரூ.4½ கோடி செலவிட்டு இருக்கிறார்கள். இதற்காக அருகில் உள்ள ஓட்டலுக்கு ரூ.4 கோடியே 25 லட்சம் அரசு கடன் பாக்கி கொடுக்க வேண்டியுள்ளது.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத பா.ஜ.க.வுடன், நீங்கள் (என்.ஆர்.காங்கிரஸ்) கூட்டணி வைத்திருக்கிறீர்கள்’ என்றார்.

அரசு விழாவில் காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருத்து மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

விழாவில் கூட்டுறவு பதிவாளர் ஸ்மித்தா வரவேற்றார். முடிவில் பாண்லே மேலாண் இயக்குனர் சாரங்கபாணி நன்றி கூறினார்.

Next Story