ஜிப்மரில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு வேலை கேட்டு இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்


ஜிப்மரில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு வேலை கேட்டு இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2019 4:15 AM IST (Updated: 30 Jan 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

ஜிப்மரில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு வேலை கேட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

ஜிப்மரில் சி பிரிவு பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களை புதுச்சேரி இளைஞர்களை கொண்டு மட்டுமே நிரப்பிட வேண்டும், விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு ரூ.1,500, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.1,200 என்று இருப்பதை குறைத்திட வேண்டும் என்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஜிப்மர் மருத்துவமனை எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தலைவர் ராமராஜா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பெருமாள், துணை செயலாளர் ரூவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில செயலாளர் அந்தோணி நோக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் ரவீந்திரன், அனைத்திந்திய மாணவர் சங்க செயலாளர் எழிலன் மற்றும் நிர்வாகிகள் செல்வம் பழனி, சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story