கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம், நள்ளிரவு வரை காவலில் வைக்கப்படும் பெண் ஊழியர்கள், ஆசிரியைகள்
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பெண் ஊழியர்கள், ஆசிரியைகளை நள்ளிரவு வரை போலீசார் காவலில் வைத்தனர்.
கூடலூர்,
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் (ஜாக்டோ-ஜியோ) 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 8 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாலை மறியலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் தினமும் கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்து வருகின்றனர்.
இருப்பினும் போராட்டம் முடிவுக்கு வராததால் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்து வருகின்றனர். மேலும் பெண் அரசு ஊழியர்கள், ஆசிரியைகளை திருமண மண்டபங்களில் போலீசார் தங்க வைத்து இரவு வெகு நேரத்திற்கு பிறகு விடுதலை செய்து வருகின்றனர்.
நள்ளிரவு வரை அடைத்து வைப்பது
நீலகிரி மலைப்பிரதேச மாவட்டம் என்பதாலும் காட்டு யானைகள் மற்றும் வாகன போக்குவரத்து வசதி இல்லாத பகுதியாக விளங்குகிறது. கூடலூர் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. மாலை நேரம் தொடங்கியதும் வனத்தில் இருந்து காட்டு யானைகள் அதிகளவு வெளியேறி ஊருக்குள் வருகின்றன. இதனால் பலர் வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகும் பெண் ஊழியர்கள், ஆசிரியைகளை நள்ளிரவு வரை அடைத்து வைத்து பின்னர் விடுதலை செய்கின்றனர். இதனால் அவர்கள் அங்கிருந்து தங்கள் பகுதிக்கு செல்ல மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இந்த செயல் சட்ட விரோதமாகும் என பல்வேறு தரப்பினரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வக்கீல்கள் மற்றும் பெண் ஊழியர்களின் குடும்பத்தினர் கூறியதாவது:-
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி பெண் கைது செய்யப்பட்டால் மாலை 6 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இல்லையெனில் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த சில தினங்களாக கூடலூர் பகுதியில் போலீசார் உள்நோக்கத்துடன் பெண் ஊழியர்கள், ஆசிரியைகளை நள்ளிரவு வரை திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கின்றனர்.
வாகன போக்குவரத்து வசதி மற்றும் காட்டு யானைகள் நடமாட்டம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் உள்ள கூடலூர் பகுதியில் மனிதாபிமானம் இன்றி போலீசார் பெண் ஊழியர்களை அடைத்து வைப்பது சட்ட விரோதம். போலீசாரின் செயலுக்கு கண்டனமும் தெரிவித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story