கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட்டஅதிகாரிகள் மீது நடவடிக்கை


கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட்டஅதிகாரிகள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Jan 2019 4:15 AM IST (Updated: 30 Jan 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

‘கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோவை மண்டல தலைமை பொறியாளரிடம் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் மனு கொடுத்தனர்.

கோவை, 

கோவை மண்டல நீர்ப்பாசனத்துறை தலைமை பொறியாளர் செல்வகுமாரை, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், பொதுக் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜகோபால், நிர்வாக குழு உறுப்பினர்கள் நல்லதம்பி, ஈஸ்வரன், கோபால், வரதராஜ் மற்றும் ஏராளமான பி.ஏ.பி. பாசன விவசாயிகள் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

பி.ஏ.பி. பாசன திட்டத்துக்கு உட்பட்ட திருமூர்த்தி அணையில் இருந்து 3-ம் மண்டல பாசனத்திற்கும், உப்பாறு அணைக்கும் தண்ணீர் விட வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து விட்டு, நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டும் என்று திட்டக்குழுவின் சார்பில் மேல்முறையீட்டு மனு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தனி நீதிபதியின் உத்தரவை தடை செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறையினர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யாதது வேதனை அளிக்கிறது. தமிழக அரசு தொடர்ந்து பி.ஏ.பி. விவசாயிகளை குறிப்பாக திருமூர்த்தி அணை விவசாயிகளை புறக்கணிப்பது வேதனையாக உள்ளது.

இந்த நிலையில் திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு 119 மில்லியன் கன அடி தண்ணீரை பி.ஏ.பி. கால்வாய் வழியாக திறந்து விட்டு உள்ளனர். ஆனால் அந்த தண்ணீர் உப்பாறு அணைக்கு சென்று சேருமா? என்பது கேள்விகுறியாக உள்ளது. அப்படியே சேர்ந்தாலும் 10 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே சேரும். அதனால் உப்பாறு அணை விவசாயிகளுக்கு எந்தவித பயனும் இல்லை.

உப்பாற்றில் உள்ள தடுப்பணைகளுக்கு அருகில் உள்ளவர்களுக்கும், ஆற்றில் மோட்டார் வைத்திருப்பவர்களுக்கும், ஆற்றின் அருகில் கிணறு வெட்டி வைத்து உள்ளவர்களுக்கும் மட்டுமே இது பயன்படும். இதுபற்றி தெரிந்தும் தமிழக அரசுக்கும், கோர்ட்டுக்கும் சரியான தகவல்களை வழங்காமல் 119 மில்லியன் கன அடி தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீணடித்து இருக்கிறார்கள்.

கடந்த 3 ஆண்டுகளாக முதல் மண்டலம் மற்றும் 3-ம் மண்டல பாசனதாரர்களுக்கு முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு 2-ம் மண்டல பாசனத்திற்கு 9,500 மில்லியன் கன அடி 5 சுற்றுகளாக கொடுக்கப்பட்டு, நல்ல முறையில் விவசாயம் செய்யப்பட்டது.

இதேபோன்று 3-ம் மண்டல பாசனத்திற்கும் 9,500 மில்லியன் கன அடி தண்ணீர் 5 சுற்றுக்களாக வழங்க அரசு ஆணை பெறப்பட்டு, முதல் சுற்று முடிந்து, 2-வது சுற்றுக்கு தண்ணீர் திறக்க உள்ள நிலையில் தண்ணீர் வீணடிக்கப்பட்டு உள்ளது. இதனால் 3-ம் மண்டல பாசனத்தில் பயிரிடப்பட்ட நிலக்கடலை, மக்காச்சோளம் போன்ற பயிர்களை எப்படி காப்பாற்றுவது என்பது தெரியவில்லை.

தண்ணீர் திறப்பிற்கு ஆட்சேபனை தெரிவித்து, மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருப்பதால் வழக்கு முடியும் வரை தண்ணீர் திறக்க அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று திட்டக்குழு சார்பில் 2 முறை கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் எங்களது எதிர்ப்பை மீறி 119 மில்லியன் கன அடி தண்ணீரை அரசும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் வீணடித்து இருப்பதை பி.ஏ.பி. விவசாயிகளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

எனவே 3-ம் மண்டல பாசனத்திற்கு முறையாக தண்ணீர் வழங்க இயலாத சூழ்நிலையை ஏற்படுத்தியதற்கும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு மேல்முறையீடு செய்யாமல் இருப்பதற்கும், திருமூர்த்தி, உப்பாறு அணை பாசன விவசாயிகளுக்கு எந்தவித பலனும் இல்லாமல் தண்ணீரை வீணடித்து கொண்டிருக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 3-ம் மண்டல பாசனத்திற்கு கோர்ட்டு உத்தரவுப்படி இன்னும் 4 சுற்று தண்ணீரை வழங்குவதற்கு அரசு உரிய உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story