சென்னையில் போலி பெண் டாக்டர் கைது


சென்னையில் போலி பெண் டாக்டர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2019 4:30 AM IST (Updated: 30 Jan 2019 4:10 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் போலி சான்றிதழ்கள் மூலம் வேலைக்கு சேர்ந்ததாக பெண் டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் துறையின் அதிகாரி அசோக்குமார். இவர் சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் துறையில் 16 டாக்டர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்தனர். அவர்களுக்கு தலா ரூ.35 ஆயிரம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. பணியில் சேர்ந்தவுடன் அந்த 16 டாக்டர்களின் சான்றிதழ்களையும் ஆய்வு செய்தோம். வேலூரை சேர்ந்த ரேச்சல் ஜெனிபர் (வயது 35) என்பவரும் டாக்டராக பணியில் சேர்ந்தார்.

வேலைக்காக அவர் சமர்ப்பித்த சான்றிதழ்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர் கொடுத்த சான்றிதழ்களில் ஒட்டப்பட்டிருந்த பெண்ணின் புகைப்படமும் வேறொரு பெண்ணின் புகைப்படமாக இருந்தது. மருத்துவ கவுன்சிலில் ரேச்சல் ஜெனிபர் பதிவு செய்த பதிவு எண்ணில் வேறொரு பெண்ணின் பெயர் இருந்தது.

சான்றிதழ்களின் நகல்கள்

இதை வைத்து பார்க்கும்போது வேறொரு பெண்ணின் சான்றிதழ்களை தன்னுடைய சான்றிதழ்கள் என்று கொடுத்து டாக்டர் ரேச்சல் ஜெனிபர் பணியில் சேர்ந்தது தெரியவந்தது. அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் ரேச்சல் ஜெனிபர் பணியில் சேர்ந்தபோது சமர்ப்பித்த போலி சான்றிதழ்களின் நகல்கள் புகார் மனுவோடு இணைத்து கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தேனாம்பேட்டை உதவி கமிஷனர் கோவிந்தராஜ் மேற்பார்வையில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சான்றிதழ்களை போலீசார் சரி பார்த்தனர். அவை போலியானவை என்று தெரியவந்தது.

கைது

இதன்பேரில் ரேச்சல் ஜெனிபர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் டாக்டராக தற்போது பணியில் இருந்தார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று தேனாம்பேட்டை போலீசார் தெரிவித்தனர்.

ரேச்சல் ஜெனிபருக்கு போலி சான்றிதழ்களை தயாரித்து கொடுத்ததாக பெண் உள்பட இருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story