கடையநல்லூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா: பெண்கள் தீச்சட்டி ஊர்வலம்


கடையநல்லூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா: பெண்கள் தீச்சட்டி ஊர்வலம்
x
தினத்தந்தி 30 Jan 2019 3:45 AM IST (Updated: 30 Jan 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஏராளமான பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கடையநல்லூர், 

கடையநல்லூர் மலம்பேட்டை தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 22-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவில் தினமும் அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான நேற்று கொடைவிழா நடந்தது. காலையில் திரளான பெண்கள் கோவிலில் பொங்கலிட்டு அம்பாளுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து ஏராளமான பெண்கள் நேர்த்திக்கடனாக தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலமானது கோவிலில் இருந்து புறப்பட்டு அப்பகுதியில் உள்ள வடக்கத்தி அம்மன் கோவிலை சென்றடைந்தது. மதியம் 12 மணிக்கு தாமரைக்குளம் சுடலைமாடன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் மாலையில் முத்துமாரியம்மன் மற்றும் வடக்கத்தி அம்பாளுக்கு பால் அபிஷேகமும், இரவு முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) காலையில் முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

Next Story