நெல்லை தாலுகா அலுவலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் மறியலை கைவிட்டதால் கைது நடவடிக்கை இல்லை


நெல்லை தாலுகா அலுவலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் மறியலை கைவிட்டதால் கைது நடவடிக்கை இல்லை
x
தினத்தந்தி 30 Jan 2019 4:00 AM IST (Updated: 30 Jan 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை தாலுகா அலுவலகத்தில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மறியலை கைவிட்டதால் போலீசார் கைது நடவடிக்கையை கைவிட்டனர்.

நெல்லை,

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பெரும்பாலான ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்பினர். ஆனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பணிக்கு திரும்பால், நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது, விடுதலை என பரபரப்பையும் ஏற்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நெல்லை தாலுகா அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்துவதற்காக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி அங்கு 300-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்ய புறப்பட்ட போது போலீசார் அங்கு திடீரென்று வந்தனர். அவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் என்று போலீசார் எச்சரிக்கை செய்தனர்.

இது தொடர்பாக போராட்டக்குழு நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, தாலுகா அலுவலக வளாகத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் சாலைமறியலை கைவிட்டனர். இதை தொடர்ந்து போலீசார் கைது நடவடிக்கையை கைவிட்டு, பாதுகாப்பு பணியில் மட்டும் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் பார்த்தசாரதி, ராஜ்குமார் ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பாளையங்கோட்டை தி.மு.க. எம்.எல்.ஏ. மைதீன்கான் கலந்து கொண்டார். அப்போது அவர், “போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க கூடாது. அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு தீர்வு காணவேண்டும். இல்லை என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துக்கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்” என்றார். 

Next Story