தங்கையின் திருமணத்தில் பங்கேற்று திரும்பியவருக்கு நேர்ந்த பரிதாபம், வாகனம் மீது கார் மோதி பெண் டாக்டர் பலி


தங்கையின் திருமணத்தில் பங்கேற்று திரும்பியவருக்கு நேர்ந்த பரிதாபம், வாகனம் மீது கார் மோதி பெண் டாக்டர் பலி
x
தினத்தந்தி 30 Jan 2019 4:15 AM IST (Updated: 30 Jan 2019 4:16 AM IST)
t-max-icont-min-icon

சிறுபாக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மீது கார் மோதியதில் பெண் டாக்டர் ஒருவர் பலியானார். படுகாயமடைந்த அவரது கணவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சிறுபாக்கம், 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் புதுநகரை சேர்ந்தவர் கலைஞானம்(வயது 31). இவர் பெங்களூருவில் உள்ள பெல் கம்பெனியில் என்ஜினீயராக உள்ளார். இவரது மனைவி வினோதினி. டாக்டர் ஆவார். வினோதினியின் தங்கைக்கு விழுப்புரத்தில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.

இதில் கலந்துகொள்வதற்காக கலைஞானம், வினோதினி ஆகியோர் ஒருகாரில் விழுப்புரம் வந்தனர். திருமணம் முடிந்த பின்னர் நேற்று அதிகாலை அங்கிருந்து அதே காரில் பெங்களூருக்கு புறப்பட்டனர். அப்போது சேலம் வழியாக செல்ல கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே விருத்தாசலம்-சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

சிறுபாக்கம் அடுத்த அடரிகழத்தூர் பஸ் நிறுத்தத்தில் சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனம் மீது, கலைஞானம் ஓட்டி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் இடிபாட்டிற்குள் சிக்கிய கலைஞானம், வினோதினி ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் விபத்து நேர்ந்தது அதிகாலை நேரம் என்பதால் அந்த பகுதியில் யாரும் இல்லை. எனவே அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட் டது. சிறிது நேரத்திற்கு பின்னரே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வினோதினி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் கலைஞானத்திற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே சிறுபாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி செல்வன் ஆகியோர் விபத்து நேர்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விபத்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் நடந்து இருக்கும் என்றும், அந்த சமயத்தில் அந்த பகுதியில் யாரும் இல்லாததால், விபத்துக்கு காரணமான வாகன டிரைவர் அங்கிருந்து வேகமாக தப்பி சென்று இருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கையின் திருமணத்தில் பங்கேற்று திரும்பிய பெண் டாக்டர் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story