பா.ஜனதா மாநில தலைவரை எதிர்த்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் சிவசேனா மந்திரி அறிவிப்பு


பா.ஜனதா மாநில தலைவரை எதிர்த்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் சிவசேனா மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Jan 2019 4:48 AM IST (Updated: 30 Jan 2019 4:48 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வேயை எதிர்த்து போட்டியிடுவேன் என சிவசேனா மந்திரி அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சிவசேனா மந்திரியின் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜல்னா சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ. அர்ஜூன் கோட்கர். இவர் தற்போது மாநில ஜவுளி, கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளர்ப்பு துறை மந்திரியாகவும் உள்ளார். இவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜனதா அரசு ஆணவத்துடன் செயல்பட்டு வருகிறது. எனவே நான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி.யாக உள்ள ராவ்சாகேப் தன்வேயை எதிர்த்து போட்டியிட உள்ளேன். இது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எனக்கு அறிவுறுத்தி உள்ளார்.

ஜல்னாவில் மாநில அளவிலான பா.ஜனதா கூட்டம் நடைபெற்றது. அதே மாவட்டத்தில் விவசாயிகள் போலீசாரால் தாக்கப்படுகிறார்கள். இது அந்த கட்சிக்கு விவசாயிகள் குறித்தும், அவர்களின் கஷ்டங்கள் குறித்தும் எந்த அக்கறையும் இல்லை என்பதை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சிவசேனாவும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்தாலும், உத்தவ் தாக்கரேவின் அனுமதியுடன் ராவ்சாகேப் தன்வேயை எதிர்த்து களம் இறங்குவேன் என அவர் கூறினார்.

ராவ்சகேப் தன்வே மராட்டிய மாநில பா.ஜனதா தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பா.ஜனதா மந்திரி பங்கஜா முண்டே அளித்த பேட்டியில், “நாங்கள் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க காரணம் இரண்டு கட்சிகளும் ஒரே கொள்கையை அடிப்படையாக கொண்டது என்பதுதான்.

ஆனால் எங்களுடன் கைகோர்க்க விரும்பாவிட்டால், நாங்கள் தனித்து தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்” என்றார்.

Next Story