வானவில் : வந்துவிட்டது, டாடா ஹாரியர்


வானவில் : வந்துவிட்டது, டாடா ஹாரியர்
x
தினத்தந்தி 30 Jan 2019 3:31 PM IST (Updated: 30 Jan 2019 3:31 PM IST)
t-max-icont-min-icon

காம்பாக்ட் எஸ்.யு.வி. பிரிவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டாடா மோட்டார்சின் ஹாரியர் அறிமுகமாகிவிட்டது.

5 பேர் சவுகரியமாக பயணிக்கும் வகையிலான இந்த காம்பாக்ட் எஸ்.யு.வி. மாடலின் விலை ரூ.16 லட்சம் முதல் ரூ.21 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் சந்தையில் உள்ள ஜீப் கம்பாஸ் மற்றும் ஹூண்டாய் டக்ஸன், மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 ஆகிய கார்களுக்குப் போட்டியாக இது திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பிரிவில் இந்நிறுவனம் தயாரித்துள்ள புதிய தலைமுறை இம்பாக்ட் டிசைன் 2.0 கொண்ட கார் இதுவாகும்.

இது ஒமேகா பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸின் அங்கமான லாண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் தயாராகும் அதே பிளாட்பார்மில் இது தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சாலைப் பயணத்துக்கு மட்டுமின்றி சாகசப் பயணத்துக்கும் ஏற்றவகையில் இருப்பது இதன் சிறப்பம்சமாகும். இது பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. 2 லிட்டர் என்ஜினும், 4 சிலிண்டரைக் கொண்டதாக டீசலில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது 140 பி.ஹெச்.பி. மற்றும் 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது. முதலில் 6 கியர்களைக் கொண்டதாகவும் முன்சக்கர சுழற்சியைக் கொண்டதாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெட்ரோல் மாடல் மற்றும் ஏ.எம்.டி. மாடலிலும் இதை உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் கிரையோடெக் 2 லிட்டர் டர்போ சார்ஜ்டு மோட்டார் உள்ளதால் சாலைப் பயணத்துக்கு மட்டுமின்றி சாகசப் பயணத்துக்கும் ஏற்றதாக இது திகழ்கிறது. இதே மாடலில் 7 பேர் பயணிக்கும் வகையிலான மாடல் காரை இந்த ஆண்டு இறுதியில் வெளியிடவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் ஹெச்5.எக்ஸ். என்ற பெயரில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது இதற்கு ஹாரியர் என பெயர் சூட்டப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதில் இரண்டு தொடு திரைகள் உள்ளன. 8.8 அங்குலம் கொண்ட இவற்றில் ஒன்று காரின் கட்டுப்பாடுகளைக் கவனிக்கவும் மற்றொன்று பொழுது போக்கு அம்சங்களை அளிக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஜே.பி.எல். நிறுவனத்தின் 9 ஸ்பீக்கர்கள் துல்லியமான, ரம்மியமான இசையை உங்களுக்கு வழங்கும்.

இதில் கிளைமேட் கண்ட்ரோல், பின்புற ஏ.சி. வென்ட் ஆகியன உள்ளன. பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தமட்டில் ஏ.பி.எஸ்., குரூயிஸ் கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிடி புரோகிராம், எலெக்ட்ரானிக் பிரேக் ஆகியவை இதன் கூடுதல் சிறப்பம்சங்களாகும். 

Next Story