வானவில் : பி.எம்.டபுள்யூ.வின் புதிய எக்ஸ் 4 அறிமுகம்


வானவில் : பி.எம்.டபுள்யூ.வின் புதிய எக்ஸ் 4 அறிமுகம்
x
தினத்தந்தி 30 Jan 2019 4:09 PM IST (Updated: 30 Jan 2019 4:09 PM IST)
t-max-icont-min-icon

சொகுசு கார்களை தயாரிக்கும் ஜெர்மனியின் பி.எம்.டபுள்யூ. நிறுவனம் புதிதாக எக்ஸ்4 எனும் புதிய எஸ்.யு.வி. மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விலை ரூ.65.90 லட்சம். காரின் சாவியில் டிஸ்பிளே இருப்பது சிறப்பம்சமாகும். இதன் மூலம் காருடனான தொடர்பு டிரைவருக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இந்த கார் சென்னையை அடுத்துள்ள மறைமலை நகரில் உள்ள இந்நிறுவன ஆலையில் தயாரானதாகும்.

இதில் இரண்டு மாடல்கள் டீசலிலும் ஒன்று பெட்ரோலிலும் இயங்கும் வகையில் வந்துள்ளன. டீசல் மாடலின் விலை ரூ.60.60 லட்சம் மற்றும் ரூ.65.90 லட்சமாகும். பெட்ரோல் மாடலின் விலை ரூ.63.90 லட்சமாகும்.

நவீன தொழில்நுட்பம் அனைத்தும் இதில் புகுத்தப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் டிஸ்பிளே சாவியாகும். இத்துடன் ஜெஸ்டர் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பார்க்கிங் அசிஸ்ட் ஆகியன இதில் உள்ள சிறப்பு வசதிகளாகும்.

எஸ்.யு.வி. பிரிவில் இந்நிறுவனம் தயாரித்து வெளியிடும் இரண்டாம் தலைமுறை காராகும். நான்கு சிலிண்டரைக் கொண்ட இது, 190 ஹெச்.பி. திறனுடன் 2 லிட்டர், நான்கு சிலிண்டர் டீசல் என்ஜினைக் கொண்டது. இதில் அறிமுகமாகியுள்ள அனைத்து கார்களுமே 8 தானியங்கி கியர் ஷிப்டிங் வசதியைக் கொண்டது. இதில் எகோ புரோ, கம்பர்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் பிளஸ் ஆகிய நான்கு விதமான ஓட்டும்வசதிகள் உள்ளன.

இதில் ஐ-டிரைவ் இன்போடெயின்மென்ட் 10.25 அங்குல தொடு திரையுடன் உள்ளது. இதில் உள்ள 16 ஹார்மன் கார்டோன் ஸ்பீக்கர்கள் இசையை துல்லியமாக அளிக்கும். பாதுகாப்பு அம்சங்களுக்கு 6 ஏர் பேக்குகள் உள்ளன. குழந்தைகளுக்கான ஐசோபிக்ஸ் இருக்கை, எச்சரிக்கை உதவி வசதி உள்ளிட்டவை இதில் உள்ளன.

இந்த ஆண்டில் 12 கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது பி.எம்.டபுள்யூ. இதில் ஆண்டின் தொடக்கத்தில் எக்ஸ்4 அறிமுகம் மூலம் தனது கணக்கைத் தொடங்கிஉள்ளது.

Next Story