நாகர்கோவிலில் தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி


நாகர்கோவிலில் தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 31 Jan 2019 4:15 AM IST (Updated: 30 Jan 2019 8:23 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி தோல்நோய் மருத்துவத்துறை சார்பில் நேற்று உலக தொழுநோய் ஒழிப்புதின விழிப்புணர்வு பேரணி நடந்தது. தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்ற மையக்கருத்தை வலியுறுத்தி நடந்த பேரணிக்கு கல்லூரி தோல்நோய் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் பிரவீன் தலைமை தாங்கினார்.

மருத்துவக்கல்லூரி டீன் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் பேரணியை தொடங்கி வைத்தார். கல்லூரி வாயில் அருகில் இருந்து தொடங்கிய இந்த பேரணி ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் முன்பு நிறைவடைந்தது.

பின்னர் தோல்நோய் சிகிச்சை பிரிவில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இதனை தொடங்கி வைத்து டீன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:–

அரசு மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கை மூலம் தொழுநோய் பற்றிய உண்மைகளை மக்கள் அறிந்துள்ளனர். இந்த நோய் தற்போது குறைந்து வருகிறது. இந்த நோயை குணப்படுத்த முடியும். ஆரம்ப நிலையிலேயே இந்த நோயை கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்தப் படுவதோடு, கை, கால்கள் ஊனமாவதையும் தடுக்கலாம். இதற்கு கூட்டு மருந்து சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

இந்திய அளவில் தொழுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், டாக்டர்கள் நாராயண சீனிவாசன், பிரின்ஸ் பயஸ், முத்துக்குமார், முரளீதரன், காவேரி கண்ணன், உதவி உறைவிட மருத்துவ அதிகாரி கலைக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

மேலும் மருத்துவ மாணவ–மாணவிகள், நர்சிங் மாணவ–மாணவிகள், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் பயிலும் மாணவ–மாணவிகள், தொழுநோயாளிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story