போலீஸ் பாதுகாப்பு கேட்டு மதுரை கோர்ட்டு – கலெக்டர் அலுவலகத்தில் நிர்வாணமாக ஓடிய வக்கீல்


போலீஸ் பாதுகாப்பு கேட்டு மதுரை கோர்ட்டு – கலெக்டர் அலுவலகத்தில் நிர்வாணமாக ஓடிய வக்கீல்
x
தினத்தந்தி 30 Jan 2019 11:15 PM GMT (Updated: 30 Jan 2019 8:25 PM GMT)

போலீஸ் பாதுகாப்பு கேட்டு கோர்ட்டு மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் வக்கீல் ஒருவர் நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

மதுரை மாவட்ட கோர்ட்டு எதிரே உள்ள சாலையில் ஒருவர் நேற்று ஆடைகளை களைந்து திடீரென்று நிர்வாணமாக ஓடினார். உடனே அங்கிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் கொடுத்த புகார் மனுவில், எனது பெயர் சாமி. நான் வக்கீலாக இருக்கிறேன். வண்டியூர் பகுதியில் உள்ள ஒரு கிளப்பில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்கின்றனர். சூதாட்டம் வேறு நடக்கிறது. இதுகுறித்து நான் போலீசில் புகார் செய்ததாக கூறி 5 பேர் என்னை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே போலீசார் எனக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை பெற்று கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் வக்கீல் சாமியிடம், இது போன்று நிர்வாண போராட்டம் நடத்தக்கூடாது என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே வக்கீல் சாமி, போலீஸ் நிலையத்தில் இருந்து நேராக கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கும் அவர் மீண்டும் ஆடைகளை களைந்து நிர்வாணமாக ஓட தொடங்கினார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர், ‘‘வண்டியூரில் இயங்கும் அனுமதியற்ற கிளப்பை மூட வேண்டும்‘‘ என்று கோ‌ஷம் எழுப்பினார். இதனையடுத்து போலீசார் சாமியை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.


Next Story