பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் அன்வர்ராஜா எம்.பி. வழங்கினார்


பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் அன்வர்ராஜா எம்.பி. வழங்கினார்
x
தினத்தந்தி 30 Jan 2019 10:30 PM GMT (Updated: 30 Jan 2019 3:11 PM GMT)

பாராளுமன்ற உறுப்பினர் நிதியின் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டரை அன்வர்ராஜா எம்.பி. வழங்கினார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அன்வர்ராஜா எம்.பி. கலந்து கொண்டு 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை வழங்கினார். விழாவில் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் பேசியதாவது:– தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனை பாதுகாக்க மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் பராமரிப்பு உதவித்தொகை வழங்குதல், தேசிய அடையாள அட்டை வழங்குதல், உதவி உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 28 ஆயிரத்து 414 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுஉள்ளது. மேலும் 2017–18–ம் நிதியாண்டில் 5 ஆயிரத்து 346 பேருக்கு ரூ.8 கோடியே 52 லட்சம் மதிப்பிலும், 2018–19–ம் நிதியாண்டில் இதுவரை 4 ஆயிரத்து 974 பேருக்கு ரூ.6 கோடியே 72 லட்சம் மதிப்பிலும் பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் சுயமாக தொழில் செய்து முன்னேற ஏதுவாக அரசு மானியத்துடன் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

அதனை தொடர்ந்து விழாவில் அன்வர்ராஜா எம்.பி. பேசியதாவது:– முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மாற்றுத்திறனாளிகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு தாயுள்ளத்தோடு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். மாற்றுத்திறனாளிகளிடத்தில் ஏற்றத்தாழ்வு பாராமல், அவர்கள் சமுதாயத்தில் முன்னேற சமவாய்ப்பு வழங்கி ஊக்கப்படுத்துவதே நாம் அவர்களுக்கு செய்யும் உதவியாகும். அந்த வகையில் சுயமாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற முனைப்போடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களை ஊக்கப்படுத்திடும் விதமாக எனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.54 ஆயிரத்து 362 மதிப்பில் 10 நபர்களுக்கு ஸ்கூட்டர் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக முடநீக்கு வல்லுனர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.


Next Story