காந்த விசை கருவியால் விளைநிலங்களில் உவர்ப்பு நீரை மாற்றி மகசூலை அதிகரிக்கலாம் கலெக்டர் தகவல்
விளை நிலங்களில் உவர்ப்பு நீரை நல்ல தண்ணீராக மாற்றும் காந்த விசை கருவியை பொருத்தி மகசூலை அதிகரிக்கலாம் என கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.
இளையான்குடி,
இளையான்குடி ஒன்றியம் லெட்சுமிபுரம் கிராமத்தில் முன்னோடி விவசாயி கன்னியப்பன் என்பவரது விளை நிலத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் மின் விசை மோட்டாரின் முகப்பு பகுதியில் அமிலத்தன்மையை பிரித்தெடுக்கும் காந்த விசை கருவி பொருத்தப்பட்டு அதன் வழியாக நல்ல தண்ணீராக வெளி வந்து பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:–
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் ஆழ்துளை கிணற்றில் உவர்ப்பு தன்மை வருவதாகவும், அதனால் முற்றிலும் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து இதை சரி செய்வதற்கான வழியை மேற்கொள்ளும் விதமாக குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டது. இதைதொடர்ந்து சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் தமறாக்கியிலும், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள லெட்சுமிபுரத்திலும், சூராணம் ஊராட்சியிலும் என 3 இடத்தில் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த பகுதியில் எடுக்கப்பட்ட தண்ணீரில் உப்புத்தன்மை அதிகம் இருப்பது தெரியவந்தது.
இந்த தண்ணீரால் விளைநிலங்களில் உப்பு படிந்து மண்ணின் தன்மை கெடும். இதை கருத்தில் கொண்டு வேளாண் ஆராய்ச்சி பேராசிரியர்கள் தங்களது ஆராய்ச்சியின் மூலம் உவர்ப்பு நீரை நல்ல தண்ணீராக மாற்ற முடிவு செய்தனர். இதற்காக விஞ்ஞான ரீதியாக காந்த சுழற்சி கருவி செயல்பாட்டின் மூலம் உவர்ப்பு நீரை, நல்ல தண்ணீராக மாற்றினர். இந்த ஆராய்ச்சி குழுவின் செயல்பாட்டால் லெட்சுமிபுரத்தில் காந்த விசை கருவி பொருத்தப்பட்டு நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சூராணத்தில் கடந்தாண்டு உவர்ப்பு நீரில் விவசாயம் செய்து ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 20 மூடை நெல் மகசூல் கிடைத்தது. ஆனால் இந்தாண்டு அதே விவசாயி காந்த விசை கருவியை பொருத்தி விவசாய பணிகளை மேற்கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தில் 32 மூடை நெல் மகசூல் செய்துள்ளார். அதே போல் தமறாக்கி பகுதியில் மிளகாய் பயிர் சாகுபடி செய்து மிளகாய் வீரியத்தன்மையுடனும், அதிக மகசூலும் கிடைத்துள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் உவர்ப்பு நீர் அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து ஆராய்ச்சிக் குழுவை அனுப்பி முழுமையாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் உவர்ப்பு நீர் உள்ளது என தெரிந்தால் வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளர்களிடம் இது குறித்து ஆலோசனை பெற்று காந்த விசை கருவி பொருத்தி பயனடைலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி மைய முதல்வர் செந்தூர்குமரன், மண்ணியியல் பேராசிரியர் விமலேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புத்துரை, அழகுமீனாள் மற்றும் முன்னோடி விவசாயிகள் உடனிருந்தனர்.