காவேரிப்பாக்கத்தில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


காவேரிப்பாக்கத்தில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 31 Jan 2019 4:00 AM IST (Updated: 30 Jan 2019 10:16 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பாக்கத்தில் மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியை உடைத்து ரூ.40 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பனப்பாக்கம், 

பனப்பாக்கத்தை அடுத்த மேலபுலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் யோகலட்சுமி (வயது 22). இவரது தம்பி ஜனார்த்தனன் (18). இருவரும் கடந்த 29-ந் தேதி ஓச்சேரியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் வங்கியில் இருந்து ரூ.40 ஆயிரத்தை எடுத்துகொண்டு, அதை மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினர்.

அதைத் தொடர்ந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் மேலபுலம்புதூர் கிராமத்தை நோக்கி வந்தனர். அப்போது காவேரிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இட்லி கடை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இருவரும் சாப்பிட சென்றனர்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே பெட்டியில் பார்த்தபோது அதில் இருந்த ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து யோகலட்சுமி காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story