கூடலூரில் அரசு பெண் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கூடலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பெண் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
எல்.கே.ஜி., யு.கே.ஜி. மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது, 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர்(ஜாக்டோ-ஜியோ) தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக கூடலூர் பகுதியில் அரசு அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தன. மேலும் பல அலுவலகங்கள் பூட்டியே உள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் பெரும்பாலான அரசு பள்ளிகள் ஆசிரியர்கள் வருகை இன்றி மூடிக்கிடக்கின்றன.
இதற்கிடையில் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள், உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் பணியை போலீசார் தொடங்கினர். கூடலூர் பகுதியில் மொத்தம் 86 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தம்பிதுரை தலைமையில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ரவிக்குமார், ஜெய்சிங், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் உள்ளிட்ட போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் அதிக எண்ணிக்கையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் பெண் ஊழியர்கள், ஆசிரியைகளை கைது செய்து தனியார் மண்டபங்களில் நள்ளிரவு வரை போலீசார் அடைத்து வைத்த சம்பவம் பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
போலீசாரின் தொடர் நெருக்கடியால் ஆண் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களுக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் நேற்று அரசு பெண் ஊழியர்கள், ஆசிரியைகள் கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் தோழமை சங்க நிர்வாகி சுந்தரம் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story