ஆனைமலை வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தல் - நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு


ஆனைமலை வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தல் - நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 31 Jan 2019 3:15 AM IST (Updated: 30 Jan 2019 10:47 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை வழியாக கேரளாவுக்கு ஜல்லி கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்ட கனிமவளங்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனைமலை,

கேரள மாநிலத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்க ஆறுகளில் மணல், அள்ளவும், கல் குவாரிகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிலர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அதிகளவில் கேரளாவுக்கு கடத்தி வந்தனர். இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்ததும் தமிழகத்தில் இருந்து கனிமவளங்கள் வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்ல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது. இருந்தபோதிலும் கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்திச் செல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை வழியாகவே அதிகளவில் கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். மேலும் மாவட்ட கலெக்டருக்கும், முதல்-அமைச்சர் தனிப்பிரிவிற்கும் புகார் மனு அனுப்பினர். அந்த மனுவில், திருச்சி, கரூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து மணல் அதிகளவில் ஆனைமலை வழியாக கேரளாவுக்கு கடத்தப்பட்டு வந்தது. தற்போது உள்ளூரிலேயே மணலுக்கு தட்டுப்பாடு என்பதால் மணல் கடத்தல் ஓரளவு நின்றுவிட்டது.

ஆனாலும் ஒரு சிலர் ஆனைமலை, ஆழியாறு பகுதிகளில் ஆற்றின் கரைகளில் இருந்து மணலை எடுத்து கேரளாவுக்கு கடத்தி வருகின்றனர்.

மேலும் ஜல்லி கற்கள், பெரிய அளவிலான கருங்கற்கள் (சைஸ் கல், போல்டர் கல்), ஜல்லி கற்களின் பொடியான எம்.சாண்ட் ஆகியவை தற்போது வரை கேரளாவுக்கு அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது. பொள்ளாச்சியை அடுத்த ஊஞ்சவேலாம்பட்டி அருகே உள்ள பெரியாகவுண்டனூர், திம்மங்குத்து, கஞ்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கல் குவாரிகள் செயல்படுகின்றன. இங்கிருந்து ஜல்லி கற்களை விலைக்கு வாங்கி ஆனைமலையை அடுத்த மீனாட்சிபுரம், செம்மனாம்பதி ஆகிய இரு வழித்தடங்களிலும் டிப்பர் லாரி, டாரஸ் லாரி ஆகியவை மூலம் கேரளாவுக்கு தங்கு தடையின்றி கடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி, ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம், சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் இக்கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கேரளாவில் இருந்து டாரஸ் எனப்படும் பெரிய அளவிலான லாரிகளும் இங்கு வந்து எவ்வித தடையும் இன்றி ஜல்லி கற்கள், கருங்கற்களை கேரளாவுக்கு கடத்திச் செல்கின்றன. அதேபோல் டிப்பர் லாரிகளில் 17 டன் எடையுள்ள பொருட்களைதான் கொண்டு செல்ல வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் கேரளாவுக்கு கருங்கல் கடத்துவோர் டிப்பர் லாரிகளில் 30 டன் வரை கருங்கல்லை ஏற்றிச்செல்கின்றனர். அதேபோல் டாரஸ் லாரிகளிலும் அதிகளவிலான கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன. ஆகவே இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இந்த நிலையில் கனிமவளங்கள் கடத்தல் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி வால்பாறை சரக போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியத்துக்கு, மாவட்ட கலெக்டர் ஹரிகரன் உத்தரவிட்டுள்ளார்.

கலெக்டரின் உத்தரவை அடுத்து போலீஸ் அதிகாரிகள் சிலருக்கு துணை சூப்பிரண்டு மெமோ எனப்படும் குறிப்பாணையை வழங்கியுள்ளார். அதில் விதிகளை மீறி கனிம வளங்களை கொண்டு செல்லும் லாரிகள் மீது உடனே நடவடிக்கை எடுத்து அது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Next Story