விழுப்புரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2019 4:15 AM IST (Updated: 31 Jan 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சகாபுதீன் முன்னிலை வகித்தார். மாநில துணை செயலாளர் மாசிலாமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு போர்கால அடிப்படையில் முழுமையான நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும், விழுப்புரத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் ராமமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் நிதானம், பாலசுப்பிரமணி, ராமநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் சுரேஷ், மூர்த்தி, துணைத்தலைவர்கள் தர்மேந்திரன், லட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story