மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாம் 5-ந் தேதி தொடங்குகிறது
நாமக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாம் வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது.
நாமக்கல்,
இது தொடர்பாக கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடன்உதவி, ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 5-ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. அதன்படி அன்று காலை 11 மணிக்கு நாமக்கல்லிலும், பிற்பகல் 3 மணி அளவில் மோகனூரிலும், மாலை 4 மணிக்கு பரமத்திவேலூரிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. இதேபோல் 6-ந் தேதி காலை 11 மணிக்கு திருச்செங்கோட்டிலும், அன்று பிற்பகல் 3 மணிக்கு குமாரபாளையத்திலும், 7-ந் தேதி காலை 11 மணிக்கு ராசிபுரத்திலும், பிற்பகல் 3 மணிக்கு சேந்தமங்கலத்திலும் முகாம் நடக்கிறது.
இந்த திட்டங்களின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறம் எனில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறம் எனில் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். எனவே நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் கடன் வழங்கும் சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு, கடன் விண்ணப்பங்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும்.
கடன் விண்ணப்பங்களுடன் விண்ணப்பதாரர் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story