சென்னிமலை அருகே விவசாய நிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரம்
சென்னிமலை அருகே விவசாய நிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னிமலை,
திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே உள்ள ராசிபாளையம் என்ற ஊரில் இருந்து தர்மபுரி மாவட்டம், பாலவாடி வரை மின்சாரம் கொண்டு செல்வதற்கு கடந்த 2014–ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
ஆனால் விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் நடைபெறாமல் இருந்தது. அதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் போராட்டம் நடைபெற்றது. சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் முதலியாக்கவுண்டன்வலசு பகுதியில், விவசாய நிலத்தில் மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகளும் விவசாயிகளும் அங்கு வந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும் கடந்த 3 நாட்களுக்கு முன்பும் 5 பெண்கள் உட்பட 13 பேர் திடீரென மின்கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் மீண்டும் மின்கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியது. இதையொட்டி பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல் (அறச்சலூர்), மணிகண்டன்(கொடுமுடி), செல்வராஜ் (சென்னிமலை)ஆகியோர் மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து மின்கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.