நெய்வேலியில் என்.எல்.சி. சுரங்க நீரில் மூழ்கி அதிகாரி சாவு


நெய்வேலியில் என்.எல்.சி. சுரங்க நீரில் மூழ்கி அதிகாரி சாவு
x
தினத்தந்தி 30 Jan 2019 10:45 PM GMT (Updated: 30 Jan 2019 7:41 PM GMT)

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் சுரங்க நீரில் மூழ்கி அதிகாரி பலியானார்.

நெய்வேலி, 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சுரங்கம் தோண்டப்பட்டு ராட்சத எந்திரம் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுக்கும் போது தண்ணீர் தேங்கும். இந்த தண்ணீர் ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றப்படும். இந்த பணியில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சுரங்கத்தில் தண்ணீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட போது அதிகாரி ஒருவர் சுரங்கத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். அதன் விவரம் வருமாறு:-

நெய்வேலி 12-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் ராஜலிங்கம்(வயது 59). இவர் என்.எல்.சி. சுரங்கம் 1 ‘ஏ’வில் நிலக்கரி நீர் கட்டுப்பாட்டு பிரிவில் துணை பொதுமேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முதல் கட்ட பணிக்கு சென்ற அவர், அங்கு சுரங்கத்தில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரனெ தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

இதை அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ராஜலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ராஜலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து டவுன்ஷிப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story