சேலத்தில், தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்
சேலத்தில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.
சேலம்,
சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில், தேசிய தொழுநோய் எதிர்ப்பு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ரோகிணி தலைமையில் அனைவரும் உறுதி மொழியை எடுத்தனர்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
தொழுநோய் பற்றிய அடிப்படை தகவல்களை மக்களிடையே பரப்பி, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அனைத்து வட்டார தலைமையிடங்களில் விழிப்புணர்வு ஊர்வலங்களும், அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களும், அரசு மருத்துவக்கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் தோல் சிகிச்சை முகாம்கள், பள்ளிகளில் மாணவ-மாணவியர்களுக்கு தொழுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்களும் வருகிற 2-ந் தேதி வரை நடைபெறுகின்றது.
முகாம்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு சிவந்த உணர்ச்சியற்ற தேமல், உணர்ச்சி குறைந்த அல்லது உணர்ச்சியற்ற தேமல், தோலில் மினுமினுப்பு, கை, கால்களில் உணர்ச்சியற்ற தன்மை, குதிகாலில் நீண்ட வெடிப்பு, பாதங்களில் ஆறாத நாட்பட்ட குழிப்புண்கள் போன்ற அறிகுறிகள் இருப்பின் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை பெற்று பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் வளர்மதி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் (தொழுநோய்) குமுதா, அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் தனபால் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் சிலைக்கு கலெக்டர் ரோகிணி மாலை அணிவித்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் நாட்டாண்மை கழக அலுவலகம், திருவள்ளுவர் சிலை, சேலம் மாநகராட்சி அலுவலகம் வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை வந்தடைந்தது.
Related Tags :
Next Story