கெங்கவல்லியில் கிணற்றில் தவறிவிழுந்து தத்தளித்த புள்ளிமான் மீட்பு


கெங்கவல்லியில் கிணற்றில் தவறிவிழுந்து தத்தளித்த புள்ளிமான் மீட்பு
x
தினத்தந்தி 31 Jan 2019 3:30 AM IST (Updated: 31 Jan 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

கெங்கவல்லியில் கிணற்றில் தவறிவிழுந்து தத்தளித்த புள்ளிமானை தீயணைப்பு வீரர்கள் நேற்று உயிருடன் மீட்டனர்.

கெங்கவல்லி, 

கெங்கவல்லி பேரூராட்சி பகுதியில் கடம்பூர் மலையடிவாரத்தில் 9-வது வார்டு தெற்கு பகுதி உள்ளது. இங்கு சுந்தரராஜன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. நேற்று காலையில் இவர் தனது விவசாய தோட்டத்திற்கு சென்றார்.

அப்போது அங்குள்ள 60 அடி ஆழ கிணற்றை அவர் எட்டி பார்த்தார். அதில் 20 அடி ஆழத்தில் தண்ணீர் இருந்ததும், அதில் புள்ளிமான் ஒன்று தத்தளித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் சுப்பிரமணியன், வெங்கடேஷ், சதீஷ் மற்றும் வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி கிணற்றில் தத்தளித்த மானை கயிற்றால் கட்டி மேலே கொண்டு வந்தனர்.

பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட அந்த மானை தம்மம்பட்டி வனத்துறையினரிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து அந்த மான் கடம்பூர் வனப்பகுதியில் விடப்பட்டது.

இது குறித்து தம்மம்பட்டி வனச்சரகர் ராமச்சந்திரன் கூறும் போது, ‘கடம்பூர் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி மலையடிவார பகுதிக்கு வந்த 2 வயதான ஆண் புள்ளிமான் விவசாய தோட்டத்து கிணற்றில் தவறிவிழுந்து இருக்கலாம். நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம். தற்போது அந்த மான் மீட்கப்பட்டு மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது‘ என்றார்.

Next Story