‘திருவாரூர் இடைத்தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும்’ மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்


‘திருவாரூர் இடைத்தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும்’ மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
x
தினத்தந்தி 31 Jan 2019 4:45 AM IST (Updated: 31 Jan 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் இடைத்தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என்று மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

மதுரை,

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த தாமோதரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் திடீரென இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் இடைத்தேர்தலை ரத்து செய்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது சட்டவிரோதம். தேர்தல் அறிவிப்பை ரத்து செய்வதற்கு முன்பு மத்திய அரசிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் ஏற்கனவே தேர்தல் ஆணையம் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த 8–ந்தேதி தேர்தல் ஆணையம் அனுப்பிய கடித நகல் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘திருவாரூர் தொகுதியில் 6.2.2019–க்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28–ந்தேதி இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, அது தொடர்பாக கடந்த 3–ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. திருவாரூரில் கஜா புயல் நிவாரண பணிகள் நடைபெறுவதால் தற்போது தேர்தல் நடத்த வேண்டாம் என தலைமை செயலாளர் மற்றும் அனைத்து கட்சிகளின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. இதனால் திருவாரூர் தொகுதியில் 6.2.2019–க்குள் இடைத்தேர்தல் நடத்த முடியாது. உரிய நேரத்தில் திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும்’ என்று கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மனுதாரர் வக்கீல் ஆஜராகி, ‘‘மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்ற பிறகு தான் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஆனால் திருவாரூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட பின்னர், மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம்’’ என்றார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 5–ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


Next Story