மேட்டுப்பாளையத்தில் 48 நாட்கள் நடந்த முகாம் நிறைவு, பிரியாவிடை பெற்று யானைகள் ஊர் திரும்பின
மேட்டுப்பாளையத்தில் 48 நாட்கள் நடந்த யானைகள் நலவாழ்வு முகாம் நேற்று நிறைவுபெற்றது. இதையடுத்து பிரியாவிடை பெற்று ஊர் திரும்பிய யானைகளை அமைச்சர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 11-வது ஆண்டு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி தொடங்கியது.
அங்கு தினசரி காலை, மாலை என இருவேளையும் யானையின் வயது உடல் எடைக்கு ஏற்ப நடைபயிற்சி அளிக்கப்பட்டது. ஷவர் மற்றும் குளியல் மேடையில் பாகன்கள் யானைகளை குளிக்க வைத்தனர்.
முகாமில் உள்ள யானைகளுக்கு கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையின்படி சமச்சீர் உணவு, பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டன. மேலும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவ குழுவினர் யானைகளை மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை வழங்கினர். இதற்கிடையில் யானை பாகன்களின் உடல் நலத்தை கண்காணிப்பதற்கும் மருத்துவ அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது.
தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற்ற முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. வழக்கம்போல் யானைகளுக்கு காலை நடைப்பயிற்சி அளித்து குளிக்க வைக்கப்பட்டன. சமச்சீர் உணவு பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் யானைகள் அலங்கரிக்கப்பட்டு அணிவகுத்து வரிசையாக நிறுத்தப்பட்டன.
முகாமில் தோழிகளாக பழகிய யானைகள் தாங்கள் பிரிந்து செல்வதை அறியாமல் துதிக்கையால் ஒன்றையொன்று தழுவி விளையாடி மகிழ்ந்தன. வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட யானைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை தலைமையிடத்து இணை ஆணையர் ஹரிபிரியா, கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் ஆகியோர் பழங்களை வழங்கினார்கள்.
பின்னர் 3 மணி அளவில் ஒவ்வொரு யானைகளாக லாரிகளில் ஏற்றப்பட்டன. மாலை 4.30 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கொடியசைத்து யானைகளை வழியனுப்பி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓ.கே.சின்னராஜ், பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், கோவை வடக்கு உதவி கலெக்டர் கார்மேகம், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பழனிக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. யானைகளை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சியை பொதுமக்கள் திரண்டு நின்று பார்த்து ரசித்தனர்.
Related Tags :
Next Story