நெல்லையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்
நெல்லையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடந்தது.
பணிக்கு ஆசிரியர்கள் வராவிட்டால் அந்த பணியிடம் காலி பணியிடமாக அறிவிக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பெரும்பாலான ஆசிரியர்கள் நேற்று முன்தினம் பணிக்கு திரும்பினர். ஆனால் அரசு ஊழியர்கள் சங்கம் சில ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் போராட்டம் நடத்திய 22 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு, விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜாக்டோ-ஜியா நிர்வாகிகள் நேற்று முன்தினம் நெல்லை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று 2-வது நாளாக அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், பார்த்தசாரதி ஆகியோர் தலைமை தாங்கினர். ஒருங்கிணைப்பாளர் மணிபாலன் முன்னிலை வகித்தார். உயர்மட்ட குழு உறுப்பினர் மணிமேகலை கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story