சித்ரதுர்காவில் இருந்து நடைபயணமாக வந்தனர்: மதுவிலக்கை அமல்படுத்த கோரி பெண்கள் ஊர்வலம் பெங்களூருவில் நடந்தது
மதுவிலக்கை அமல்படுத்த கோரி பெங்களூருவில் நேற்று பெண்கள் ஊர்வலம் நடத்தினர். சித்ரதுர்காவில் இருந்து அவர்கள் நடைபயணமாக பெங்களூரு வந்தனர்.
பெங்களூரு,
சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பெண்கள், மதுவிலக்கை அமல்படுத்த கோரி நடைபயணத்தை கடந்த 19-ந் தேதி தொடங்கினர். அவர்கள் நடைபயணமாக நேற்று பெங்களூரு வந்து சேர்ந்தனர். அதன்பின்னர் மல்லேசுவரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு வந்தனர்.
அங்கிருந்து மெஜஸ்டிக் வழியாக அவர்கள் விதான சவுதா நோக்கி ஊர்வலமாக சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் சுதந்திர பூங்காவுக்கு சென்றனர். கர்நாடகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
தெருவுக்கு வந்துவிட்டன
அங்கு சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசாமி நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். அவர் பேசியதாவது:-
மதுபானங்களால் மரணங்கள் நிகழ்கின்றன. பல குடும்பங்கள் தெருவுக்கு வந்துவிட்டன. மதுபான பயன்பாட்டை மாநில அரசு ஊக்கப்படுத்துகிறது. இந்த மதுபானம், மக்களின் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கிறது.
மதுபான விற்பனை மூலம் வரும் பணத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாவத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது சரியல்ல. அதனால் கர்நாடகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு எச்.எஸ்.துரைசாமி கூறினார்.
போக்குவரத்து நெரிசல்
கர்நாடக அரசு சார்பில் கூட்டுறவுத்துறை மந்திரி பண்டப்பா காசம்பூர் நேரில் வந்து போராட்டக்காரர்களை சந்தித்து பேசினார். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்-மந்திரி குமாரசாமி நேரில் வந்து எங்களிடம் பேச வேண்டும், மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். குமாரசாமி வரும் வரை இந்த இடத்தை விட்டுப் போக மாட்டோம் என்று அவர்கள் கூறினர். இந்த ஊர்வலத்தில் ஆண்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலத்தால் மெஜஸ்டிக் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உண்டானது.
Related Tags :
Next Story