நாட்டறம்பள்ளி அருகே தலையணையால் அமுக்கி 2 வயது ஆண் குழந்தை கொலை? தாயாரிடம் போலீசார் விசாரணை
நாட்டறம்பள்ளி அருகே தலையணையால் அமுக்கி 2 வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்டதா? என்பது குறித்து குழந்தையின் தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி,
நாட்டறம்பள்ளியை அடுத்த வெள்ளநாயக்கனேரி அகரத்தான்வட்டத்தில் வசித்து வருபவர் சந்தியா (வயது 21). திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவரும் தகரகுப்பத்தை அடுத்த தொட்டிகிணறை சேர்ந்த சரவணன் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ரோஷன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
ஒரு ஆண்டுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு சந்தியா தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் சரவணன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நேற்று மதியம் ஒரு மணியளவில் வீட்டில், கட்டிலில் ரோஷன் வாயில் நுரை தள்ளியவாறு முகத்தின் மீது தலையணை வைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தான். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி சத்தம் போட்டுள்ளனர்.
இதையறிந்த சந்தியா குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார். மேலும் அவன் தூங்கி கொண்டிருக்கும்போது முகத்தில் தலையணை விழுந்து மூச்சு திணறி இறந்திருப்பதாக கூறி வந்துள்ளார். ஆனால் அங்குள்ள பொதுமக்கள், மர்மமான முறையில் குழந்தை இறந்திருப்பதாகவும், குழந்தை கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் பரபரப்பாக பேசினர்.
இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பொதுமக்கள் திம்மாம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சந்தியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நாட்டறம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story