பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி வருகிற 20-ந் தேதி முதல் 5 நாட்கள் நடக்கிறது
பெங்களூருவில் வருகிற 20-ந் தேதி சர்வதேச விமான கண்காட்சி தொடங்குகிறது. இந்த கண்காட்சி 20-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.
பெங்களூரு,
ராணுவத்துறை சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு விமான கண்காட்சி நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விமான கண்காட்சி வருகிற 20-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. எலகங்கா விமானப்படை விமான நிலைய அதிகாரி ரவுரி சீத்தல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராணுவத்துறை சார்பில் சர்வதேச விமான கண்காட்சி வருகிற 20-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. 20-ந் தேதி கண்காட்சி தொடக்க விழா நடக்கிறது. எச்.ஏ.எல். நிறுவனம், நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இந்த விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ளன. விமானப் படையின் அனைத்து துணை குழுக்களும், எச்.ஏ.எல். நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளது. இந்த கண்காட்சியில் கண்காட்சி அரங்குகள், தொடக்க விழா நடைபெறும் இடம், உணவு பகுதி, பொதுமக்கள் வாகன நிறுத்தம், பேரழிவு நிர்வாக குழு மற்றும் மருத்துவ குழுக்கள் இருக்கும்.
3,000 இருக்கைகள்
இந்திய விமானப்படைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் இவை அனைத்தும் இடம் பெறும். ஒட்டுமொத்த இடமும் 5 பகுதிகளாக பிரிக்கப்படும். கண்காட்சி தொடக்க விழாவில் 3,000 இருக்கைகள் போடப்படும். வாகனங்களை நிறுத்த எளிமையான வசதி செய்யப்பட்டுள்ளது.
வாகனம் நிறுத்தும் இடத்தில் கழிவறை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பை உறுதிப்படுத்த பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து பணியாற்றும்.
365 விமான நிறுவனங்கள்
மருத்துவம், தீயணைப்பு, பேரிடர் நிர்வாக வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் பங்கேற்கின்றன. இந்த கண்காட்சியில் முக்கியமாக வணிக விமானங்கள் பங்கேற்பு, புகைப்பட கண்காட்சி, மாணவர்கள் பகுதி, புதிதாக தொழில் தொடங்குதல் சவால்கள், மகளிர் தினம், குடிநீர் வசதி, கூடுதல் உணவு மையங்கள், மாணவர்கள் பங்கேற்பு ஆகியவை இடம் பெறுகிறது.
மேலும் கண்காட்சியில் விமான சாகச நிகழ்ச்சி காலை 10 மணி முதல் 12 மணி வரை மற்றும் பகல் 2 மணியில் இருந்து 5 மணி வரை நடைபெறும். மகளிர் தின விழாவில் சுனிதா வில்லியம்ஸ் கலந்துகொள்வார். இந்த கண்காட்சியில் பங்கேற்க 365 விமான நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் 5.4 லட்சம் பேர் கண்காட்சியை கண்டு களித்தனர்.
மாணவர்கள்
டிரோன் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது. இது ஜக்கூர் விமான நிைலயத்தில் நடத்தப்படும். தினமும் 10 ஆயிரம் மாணவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ரவுரி சீத்தல் கூறினார்.
Related Tags :
Next Story