மராட்டியத்தில் முதல்-மந்திரியை விசாரிக்க லோக் அயுக்தாவுக்கு அதிகாரம் மந்திரி சபை கூட்டத்தில் முடிவு


மராட்டியத்தில் முதல்-மந்திரியை விசாரிக்க லோக் அயுக்தாவுக்கு அதிகாரம் மந்திரி சபை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 31 Jan 2019 3:33 AM IST (Updated: 31 Jan 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் முதல்-மந்திரியை விசாரிக்க லோக் அயுக்தாவுக்கு அதிகாரம் வழங்கி மராட்டிய மந்திரி சபையில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

மும்பை,

நாட்டிலேயே முதன் முறையாக லோக் அயுக்தா அமைப்பு மராட்டியத்தில் தான் உருவாக்கப்பட்டது. 1971-ம் ஆண்டு முதல் லோக்அயுக்தா செயல்பட்டு வருகிறது. ஆனால் இது வலுவான லோக்அயுக்தா இல்லை என்பதால், மத்திய அரசு 2013-ம் ஆண்டு கொண்டு வந்த புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று காந்தியவாதி அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.

2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட லோக்பால், லோக் அயுக்தா சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி நேற்று அவர் உண்ணாவிரத போராட்டத்தையும் தொடங்கினார்.

இதற்கிடையே நடைமுறையில் இருக்கும் லோக்அயுக்தா அமைப்புக்கு வலுசேர்க்கும் வகையில் நேற்று முன்தினம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதாவது முதல்-மந்திரி மீதான புகாரையும் லோக்அயுக்தா விசாரணை நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க மட்டும் லோக்அயுக்தாவுக்கு அதிகாரம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஆனால் மந்திரி சபையின் இந்த முடிவை தேசியவாத காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து உள்ளது. இது மக்களை முட்டாளாக்கும் முயற்சி என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

மராட்டிய மந்திரி சபை முடிவின்படி, பதவியில் இருக்கும் முதல்-மந்திரியை லோக்அயுக்தா விசாரிக்க முடியாது. மேலும் முதல்-மந்திரி மீது விசாரணை நடத்த கவர்னர் அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் இந்த தகவலை அரசு தெரிவிக்கவில்லை. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனக்கு புகழ் தேடிக்கொள்வதற்காக லோக்அயுக்தாவுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்.

தற்போதைய நிலவரப்படி லோக்அயுக்தா தனது விசாரணை அறிக்கையை முதல்-மந்திக்கு அனுப்பி வைக்கும். அந்த அறிக்கையை முதல்-மந்திரி நிராகரிக்கவும் முடியும்.

எதிர்க்கட்சி தலைவராக...

2013-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த லோக்பால் சட்டத்தின் வரிசையில் மராட்டியத்தில் லோக்அயுக்தா அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தினார். இந்த சட்டத்தின் படி போலீசுக்கு அதிகாரம் வழங்கப்படும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும். சொத்துகளை பறிமுதல் செய்ய முடியும். கைது செய்ய முடியும். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்து 4½ ஆண்டுகள் ஆகியும் புதிய சட்டத்தை அமல்படுத்தாதது ஏன்?.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story