சுற்றுலா சென்றபோது விபத்து கார் பள்ளத்தில் கவிழ்ந்து 2 கல்லூரி மாணவர்கள் சாவு 8 பேர் படுகாயம்


சுற்றுலா சென்றபோது விபத்து கார் பள்ளத்தில் கவிழ்ந்து 2 கல்லூரி மாணவர்கள் சாவு 8 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 31 Jan 2019 3:42 AM IST (Updated: 31 Jan 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து 2 கல்லூரி மாணவர்கள் சாவு

அம்பர்நாத்,

தானே மாவட்டம் உல்லாஸ்நகரில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகள் 10 பேர் சேர்ந்து பத்லாப்பூரில் உள்ள பார்வி அணைக்கட்டு பகுதிக்கு சுற்றுலாவுக்காக நேற்று காலை காரில் புறப்பட்டு சென்றனர். அப்போது ஒரு மாணவியின் பிறந்த நாளை காரில் வைத்து கொண்டாடினர். 10.30 மணி அளவில் பதாம் கிராமம் அருகே கார் வந்துகொண்டிருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக சென்றது. பின்னர் அந்த கார் சாலை ஓரமாக கிடந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

2 பேர் பலி

இந்த விபத்தில் நிப்பு தாய்டே (வயது18), ரோதிகா கதம் (18) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். நிகி கோலேகர், அக்சதா, ஆஷா, பிரதிக், கமலேஷ், கணேஷ் சிங் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக உல்லாஸ்நகர் சென்டிரல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான 2 மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து குல்காவ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story