‘நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரத்தில் போட்டியிட முயற்சி செய்வேன்’- தொல்.திருமாவளவன் பேட்டி


‘நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரத்தில் போட்டியிட முயற்சி செய்வேன்’- தொல்.திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 31 Jan 2019 4:15 AM IST (Updated: 31 Jan 2019 3:50 AM IST)
t-max-icont-min-icon

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்வேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த இறையூரை சேர்ந்த சபாபதி மகன் பரந்தாமன் புனேவில் மர்மமான முறையில் இறந்தார். அவரது குடும்பத்தினரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

பெண்ணாடம் அடுத்த இறையூர் கிராமத்தை சேர்ந்த சபாபதி மகன் பரந்தாமன் சந்தேகத்திற்கு இடமான வகையில் மராட்டிய மாநிலம் புனேவில் இறந்துள்ளார். ஜாமீனில் வெளியில் வந்து கையெழுத்து போட்டு வந்த சூழலில் புனேவில் பிணமாக கிடந்தது எப்படி என்று புரியவில்லை. ஒரு நாளில் எப்படி புனே சென்றார் என்பது தெரியவில்லை. சாவு என்பதை மறைத்து தற்கொலை என்று போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது அந்த குடும்பத்திற்கு செய்யும் துரோகமாகும். இந்த சாவு குறித்து தமிழக அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் அல்லது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.

பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் மீது 17-பி என்கிற பிரிவில் நடத்தை விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். இந்த அச்சுறுத்தலால் பெரும்பான்மையான ஆசிரியர்களை இன்று(அதாவது நேற்று) பணிக்கு திரும்ப வைத்திருக்கிறது அரசு. தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதாக லட்சக்கணக்கானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை தமிழக அரசு பெற்று இருக்கிறது. அவர்களுக்கு தமிழக அரசு என்ன பதில் சொல்ல போகிறது. தமிழக முதல்-அமைச்சர் என்ன விளக்கம் அளிக்கப்போகிறார் என்ற விவரம் தெரியவில்லை. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யாமல் அவர்களை அச்சுறுத்துவது கண்டனத்துக்குரியதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநில அமைப்பு செயலாளர் இளமாறன், கடலூர் நாடாளுமன்ற செயலாளர் தாமரைச்செல்வன், பெரம்பலூர் கிட்டு, மண்டல செயலாளர் திருமாறன், மாவட்ட துணை செயலாளர் திராவிடமணி, முன்னாள் மாவட்ட செயலாளர் தயா தமிழன்பன், திட்டக்குடி தொகுதி துணை செயலாளர் வேந்தன், கம்மாபுரம் ஒன்றியம் ஒருங்கிணைப்பாளர் அசுரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

சுவாமி சகஜானந்தாவின் 129-வது பிறந்த நாளையொட்டி சிதம்பரம் ஒமகுளத்தில் உள்ள நந்தனார் மடத்தில் சுவாமி சகஜானந்தா சிலைக்கு விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னார் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் சுவாமி சகஜானந்தாவின் ஆன்மிக பணியைப் பற்றியும். கல்விப்பணியைப் பற்றியும் விளக்கி பேசினார்.

பின்னர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், கல்விக்காவும், ஆன்மிகத்திற்காகவும், பாடுபட்ட சுவாமி சகஜானந்தாவின் பிறந்த நாளை தமிழக அரசு அரசு விழாவாக அறிவிக்கவேண்டும். வருகின்ற 4-ந்தேதி எனது தலைமையிலான கட்சியின் நிர்வாகக்குழு ஆலோசனை கூட்டம் சென்னையில் நடக்கிறது. அந்த கூட்டத்தில் நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே கூட்டணி குறித்து முடிவு செய்வோம். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்வேன். அவ்வாறு போட்டியிட்டால் மோதிரம் சின்னத்தில் போட்டியிடுவேன் என்று அவர் தெரிவித்தார்.

Next Story