ஒட்டன்சத்திரம் வாலிபர் கொலையில் 3 பேர் கைது
ஒட்டன்சத்திரம் வாலிபர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிளுக்கு வாங்கிய கடனை கொடுக்காததால் தீர்த்து கட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
திண்டுக்கல்,
ஒட்டன்சத்திரம் சிக்கந்தர்நகரை சேர்ந்தவர் சோனைமுத்து. இவருடைய மகன் இமானுவேல் என்ற ஜெயக்குமார் (வயது 19). இவர் நேற்று முன்தினம் இரவு ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் முன்புள்ள சகோதரரின் பூக்கடையில் இருந்தார். இரவு 7 மணிக்கு மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர், ஜெயக்குமாரை வெட்டிக் கொலை செய்தனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் சம்பவ இடத்தை பார்வையிட்டு கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், மோட்டார்சைக்கிள் வாங்கிய தகராறில் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கொல்லபட்டியை சேர்ந்த செந்தில்கணேஷ் (28), திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பாலசுப்பிரமணி (30), பண்ணப்பட்டியை அடுத்த கோம்பையை சேர்ந்த ரெங்கநாதன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் கூறுகையில், செந்தில்கணேஷ் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்று வருகிறார். இவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயக்குமார் ஒரு மோட்டார்சைக்கிளை வாங்கினார். அதில் ரூ.30 ஆயிரம் கடன் வைத்திருந்தார். அதை கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் செந்தில்கணேஷ் தரப்பினர் சில நாட்களுக்கு முன்பு ஜெயக்குமாரின் மோட்டார் சைக்கிளை பறிக்க முயன்றனர். அப்போது ஜெயக்குமார், அவர்களை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில்கணேஷ் தரப்பினர், ஜெயக்குமாரை கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story