பயணிகள் மத்தியில் வரவேற்பு எதிரொலி: சி.எஸ்.எம்.டி.- டெல்லி ராஜ்தானி ரெயிலை தினசரி இயக்க திட்டம்
மும்பை சி.எஸ்.எம்.டி.- டெல்லி இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் ராஜ்தானி ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளதை அடுத்து, அந்த ரெயிலை தினசரி இயக்க மத்திய ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.
மும்பை,
மும்பை சி.எஸ்.எம்.டி.- டெல்லி இடையே அண்மையில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. வாரம் இருமுறை இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. எனவே இந்த ரெயிலை தினசரி இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்து இருக்கிறது.
எனவே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்குவதற்கு மத்திய ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.
போதிய பெட்டிகள் இல்லை
இதுபற்றி மத்திய ரெயில்வேயின் தலைமை செய்தி தொடர்பு அதிகாரி சுனில் உடாசி கூறுகையில், ‘‘மும்பை சி.எஸ்.எம்.டி.- டெல்லி இடையிலான ராஜ்தானி எக்ஸ்பிரசை தினசரி இயக்குவதற்கான இறுதியான முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.
ஏனெனில் தற்போது எங்களிடம் போதிய பெட்டிகள் இல்லை. பெட்டிகள் கிடைத்ததும் ராஜ்தானி ரெயிலை தினசரி இயக்க மத்திய ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது’’ என்றார்.
தற்போது சி.எஸ்.எம்.டி.யில் இருந்து டெல்லி செல்லும் ராஜ்தானி ரெயிலில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் ரெயில்வே வாரியம் 21 ராஜ்தானி ரெயில் பெட்டிகளை தயாரிக்க ஒருங்கிணைந்த ரெயில்பெட்டி தொழிற்சாலைக்கு ஆர்டர் கொடுத்து இருக்கிறது.
இதில், 8 பெட்டிகள் அடுத்த மாதம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் மும்பை- சென்டிரல், பாந்திரா டெர்மினசில் இருந்து டெல்லிக்கு தினசரி ராஜ்தானி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story