லோக்பால், லோக்அயுக்தா சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல் சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் தொடங்கினார்


லோக்பால், லோக்அயுக்தா சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல் சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் தொடங்கினார்
x
தினத்தந்தி 31 Jan 2019 4:15 AM IST (Updated: 31 Jan 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

லோக்பால், லோக்அயுக்தா சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

மும்பை, 

மராட்டியத்தை சேர்ந்த காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தொடர் போராட்டம் காரணமாக முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2013-ம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக்அயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

லோக்பால் சட்டம்

இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஜனவரி முதல் அது சட்டமாகியது.

இந்த சட்டத்தின்படி மத்திய அரசு பணியாளர்களின் ஊழல் வழக்குகளை விசாரிக்க லோக்பால் அமைப்பும், மாநில அரசு பணியாளர்களின் ஊழல் வழக்குகளை விசாரிக்க அந்தந்த மாநிலங்களில் லோக்அயுக்தா அமைப்பும் உருவாக்கப்பட வேண்டும்.

மோடிக்கு கடிதம்

மராட்டியம் உள்பட சில மாநிலங்களில் ஏற்கனவே லோக்அயுக்தா அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அந்த அமைப்பு வலுவிழந்து இருப்பதால், புதிய சட்டத்தின் கீழ் லோக்அயுக்தா அமைப்பை கொண்டு வர வேண்டும் என்றும் அன்னா ஹசாரே குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் மத்தியில் லோக்பாலும், மாநிலங்களில் லோக்அயுக்தாவையும் வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக சமீபத்தில் பிரதமர் மோடிக்கு அன்னாஹசாரே கடிதம் எழுதினார்.

உண்ணாவிரதம் தொடங்கினார்

அதன்படி அவர் காந்தி நினைவு தினமான நேற்று தனது உண்ணாவிரத போராட்டத்தை சொந்த ஊரான மராட்டிய மாநிலம் அகமத் நகர் மாவட்டம் ராலேகான் சித்தி கிராமத்தில் தொடங்கினார்.

அந்த கிராமத்தில் உள்ள பத்மாவதி கோவிலில் பிரார்த்தனை செய்த அன்னா ஹசாரே, மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுடன் ஊர்வலமாக சென்றார். யாதவ்பாபா கோவிலை ஊர்வலம் சென்றடைந்தது. பின்னர் அந்த கோவில் அருகே அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இதில் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னாஹசாரே உடல் நலனை டாக்டர்கள் தொடர்ச்சியாக பரிசோதித்து வருகிறார்கள்.

போராட்டம் குறித்து அன்னா ஹசாரே கூறியதாவது:-

நிறைவேறவில்லை

மத்தியில் மோடி அரசு ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகியும் லோக்பால் சட்டத்தை அமல்படுத்தவில்லை. இது தொடர்பாக அவருக்கு நான் பல தடவை கடிதம் எழுதி விட்டேன். கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்தை தொடங்கியபோது மத்திய அரசின் சார்பில் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேரில் வந்து வாக்குறுதி அளித்தார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனால் நான் அப்போது உண்ணாவிரதத்தை முடித்து கொண்டேன். ஆனால் இதுவரை கோரிக்கைகள் நிறைவேறாததால் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளேன்.

மராட்டியத்தில் தற்போதைய லோக்அயுக்தா விசாரணை எல்லைக்குள் முதல்-மந்திரியையும் உட்படுத்த மாநில மந்திரி சபை முடிவு எடுத்துள்ளது. இதற்காக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை பாராட்டுகிறேன். ஆனால் உண்மையான லோக்அயுக்தா மலர வேண்டும்.

போராட்டம் தொடரும்

விவசாயிகளின் விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

எனது கோரிக்கைகள் ஏற்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும்.

இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

Next Story