நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் 9,170 பயனாளிகளுக்கு ரூ.43¾ கோடி மானியம்


நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் 9,170 பயனாளிகளுக்கு ரூ.43¾ கோடி மானியம்
x
தினத்தந்தி 30 Jan 2019 10:45 PM GMT (Updated: 30 Jan 2019 11:49 PM GMT)

தேனி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் 9 ஆயிரத்து 170 பயனாளிகள் பயன்பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு ரூ.43¾ கோடி மதிப்பில் மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தேனி,

தமிழக அரசு வேளாண் தொழிலை மேம்படுத்தும் வகையில், மண் வளத்தை மேம்படுத்துதல், நவீன யுக்திகளை கையாளுதல், நுண்ணூட்டச் சத்து உரங்கள் ஆகியவை உரிய நேரத்தில் கிடைக்கச் செய்தல், பயிர்க்கடன் வழங்குதல், நிவாரண உதவித்தொகை, வேளாண் இடுபொருட்கள் வழங்குதல், கடனுதவியுடன் கூடிய மானியத்தொகை, நெல் நடவு எந்திரங்கள், களை எடுக்கும் கருவிகள் வழங்குதல், கூட்டுப்பண்ணைத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும், பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்த உதவும் நுண்ணீர் பாசன முறை மூலம் பாசனப் பரப்பை உயர்த்தவும், நீர் வழி உரமிடல் மூலம் உரத் தேவையை குறைத்திடும் வகையிலும், தோட்டக்கலைத்துறை மூலம் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் சிறு,குறு விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி இத்திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் இதுவரை 1,024 பயனாளிகளுக்கு, ரூ.6½ கோடி மதிப்பில் மானியத் தொகை வழங்கப்பட்டு சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2011-2012-ம் நிதியாண்டில் இருந்து இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 170 விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு உள்ளது. மானியத் தொகையாக மொத்தம் ரூ.43 கோடியே 72 லட்சத்து 74 ஆயிரத்து 559 வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுமார் 9 ஆயிரத்து 390 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டு உள்ளது.

இத்தகவலை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

Next Story