ஆவின் முகவர்களின் பிரச்சினை உடனடியாக சரிசெய்யப்படும் தலைவர் என்.சின்னத்துரை தகவல்


ஆவின் முகவர்களின் பிரச்சினை உடனடியாக சரிசெய்யப்படும் தலைவர் என்.சின்னத்துரை தகவல்
x
தினத்தந்தி 31 Jan 2019 4:45 AM IST (Updated: 31 Jan 2019 5:46 AM IST)
t-max-icont-min-icon

ஆவின் முகவர்களின் பிரச்சினை உடனடியாக சரிசெய்யப்படும் என்று தலைவர் என்.சின்னத்துரை தெரிவித்தார்.

தூத்துக்குடி,

ஆவின் முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை தலைமை தாங்கினார். பொதுமேலாளர் ஸ்ரீரெங்கநாததுரை முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ஆவின் முகவர்கள் பேசும் போது, ஆவின் பால் கசிவு ஏற்படுகிறது. அதனை சரி செய்ய வேண்டும். தற்போது வினியோகம் செய்யும் நேரத்துக்கு முன்பாகவே பாலை முகவர்களுக்கு வினியோகிக்க வேண்டும். தயிர் தரத்தை மேம்படுத்த வேண்டும். குளிர்சாதன பெட்டி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆவின் பால் விற்பனையை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முகவர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தனியார் பாலை விட ஆவின் பால் சிறந்தது, தரமானது என்பதை முகவர்கள் பொதுமக்களிடம் விளக்க வேண்டும். இதன் மூலம் விற்பனையை அதிகரிக்க வேண்டும்.

அதேபோன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் தரம் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் 2 மாவட்டங்களிலும் பிரமாண்ட சைக்கிள் பேரணி நடத்தப்பட உள்ளது.

ஆவின் பாலில் கசிவு ஏற்படுவது 100 சதவீதம் தடுக்கப்பட்டு உள்ளது. தயிர் பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும். பிப்ரவரி மாதத்துக்குள் பால் விற்பனையை 50 ஆயிரம் லிட்டராக உயர்த்த வேண்டும். அடுத்த 3 மாதத்துக்குள் 60 ஆயிரம் லிட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நுகர்வோர்களுக்கு தற்போது சமன்படுத்திய பால், நிலைப்படுத்திய பால், நிறை கொழுப்பு பால் என 3 வகைகளில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொள்முதலை அதிகரிக்கும் வகையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏழை, பால் உற்பத்தியாளர்களுக்கு 7 ஆயிரத்து 100 கறவை மாடுகள் நபார்டு திட்டத்தின் மூலம் மானியத்துடன் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் பால் கொள்முதல் அதிகரிக்க முடியும்.

மேலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து ஓட்டல்களுக்கும் விற்பனை செய்யும் வகையில் ‘ஓட்டல் ஸ்பெஷல்‘ என்னும் புதிய பால் 10 நாட்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளோம். இந்த பாலில் கொழுப்பு சத்து 6 சதவீதமும், இதர சத்துக்கள் 10 சதவீதமும் இருக்கும். தற்போது பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் தயிர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் கப்புகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆவின் பார்லர்கள் அமைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆவின் முகவர்களுக்கு தற்போது ஒரு லிட்டருக்கு ரூ.3 கமிஷன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கமிஷன் தொகையில் மேலும் ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட உள்ளது. அதே போன்று பால்அட்டைகள் மூலம் விற்பனை செய்யும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும்.

50 லிட்டருக்கு மேல் விற்பனை செய்யும் முகவர்களுக்கு குளிர்சாதன பெட்டிகள் வழங்கப்படும். அதிகாரிகள் ஆவின் ஒன்றியத்தில் இருந்து முன்கூட்டியே பாலை எடுத்து முகவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஆவின் முகவர்களின் பிரச்சினைகள் உடனடியாக சரிசெய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஆவின் மேலாளர்கள் சுடலை, திவான் ஒலி, திரியோகராஜ் தங்கையா, சாந்தி, அனுஷாசிங், விரிவாக்க மேற்பார்வையாளர்கள் ஜெயபால், சாந்தா, சுடலைமுத்து மற்றும் ஆவின் முகவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story