அலகுமலையில் கோவில் பாரம்பரியத்தை காக்கவே வேலி அமைக்கப்பட்டுள்ளது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் பேட்டி
அலகுமலையில் அமைக்கப்பட்டுள்ள வேலி கோவில் பாரம்பரியத்தை பாதுகாக்கவே அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் எல்.முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன், மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான ஆதிதிராவிடர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
இதன்படி பொதுமக்களிடம் இருந்து 150-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களை பெற்று கொண்ட ஆணையத்தின் தேசிய துணைத்தலைவர் முருகன், கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தாட்கோ மூலம் 4 பேருக்கு பல்வேறு தொழில்கள் செய்ய மானியத்துடன் ரூ.19 லட்சத்து 95 ஆயிரத்து 247 மதிப்பில் கடனுதவியும், மகளிர் திட்டத்தின் கீழ் 10 சுய உதவிக்குழுவினருக்கு ரூ.25 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கடனுதவி என மொத்தம் ரூ.45 லட்சத்து 75 ஆயிரத்து 247 மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆணையம் தேசிய அளவிலான ஆணையம் என்பதால் அனைத்து தரப்பு பொதுமக்களும் தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்க முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் மாநில அளவிலான, தாலுகா அளவிலும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூரில் நடந்த முகாமில் வீடு வேண்டி அதிகமானோர் மனு கொடுத்துள்ளனர். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அவற்றை கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாட்கோ மூலம் ரூ.52 லட்சம் மதிப்புள்ள வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. 132 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் பஞ்சமி நிலங்களை மீட்டு அதில் அனைவருக்கும் வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி திருப்பூரில் உள்ள பஞ்சமி நிலங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.
இதை மீட்டு வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும். தமிழக அரசு எஸ்.சி., எஸ்.டி. மக்களின் கிராம மேம்பாட்டிற்காக ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. நமது மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு கட்டுமான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும். இதில் 30 சதவீதத்திற்கு மேல் ஆதிதிராவிட மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அலகுமலையில் வைக்கப்பட்டுள்ள வேலி தீண்டாமை சுவர் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. கோவிலுக்கு பாதுகாப்புக்காகவே போடப்பட்டுள்ளது. எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் கோவிலுக்கே செல்பவர்கள் இல்லை. கோவில் பாரம்பரியத்தை பாதுகாக்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் போது, திருப்பூர் சப்-கலெக்டர் ஷ்ரவன் குமார், தாராபுரம் சப்-கலெக்டர் கிரேஸ் பச்சாவு, திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி மகாராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தி, துணை கலெக்டர்கள், தேசிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மைய அதிகாரிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story