குடியாத்தம் அருகே காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 25 பேர் காயம் கிணற்றில் தவறி விழுந்த மாடு சாவு


குடியாத்தம் அருகே காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 25 பேர் காயம் கிணற்றில் தவறி விழுந்த மாடு சாவு
x
தினத்தந்தி 31 Jan 2019 10:30 PM GMT (Updated: 31 Jan 2019 4:58 PM GMT)

குடியாத்தம் அருகே காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிரிழந்தது.

குடியாத்தம், 

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த வீரிசெட்டிபல்லி ஊராட்சி குட்லவாரிபல்லி கிராமத்தில் காளை விடும் விழா நடைபெற்றது. இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, பேரணாம்பட்டு, மாதனூர், ஆந்திர மாநிலம் சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. காளை விடும் வீதியின் இருபக்கமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை நடத்தி அனுமதித்தனர். தொடர்ந்து போட்டியில் பங்குபெற்ற காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன.

இந்த நிலையில் போட்டியில் பங்கேற்று சீறிப்பாய்ந்து சென்ற ஆந்திர மாநிலம் யாதமூரியை அடுத்த கொட்டாளம் தும்மந்திபாளையம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவரது காளை அருகில் உள்ள நிலத்தின் வழியாக ஓடி சென்றது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நிலத்தின் வழியாக சென்ற காளை தண்ணீர் இல்லாத 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இருந்து மீட்ட போது காளை இறந்து கிடந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காளை விடும் விழாவில் 25-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் படுகாயம் அடைந்த 2 பேர் மேல் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விழாவில் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் டி.கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் பி.எஸ்.கோபி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், இன்ஸ்பெக்டர்கள் கவிதா, செங்குட்டுவன் உள்பட 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் குட்லவாரிபல்லி பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story