கோவையில் பிடித்து டாப்சிலிப்பில் விடப்பட்ட சின்னதம்பி யானை ஊருக்குள் புகுந்தது
கோவையில் பிடித்து டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட, சின்னதம்பி யானை பொள்ளாச்சி அருகே ஊருக்குள் புகுந்தது. அதை 3 மணி நேரம் போராடி வனத்துறையினர், வனப்பகுதிக்குள் விரட்டினர்.
பொள்ளாச்சி,
கோவையை அடுத்த கணுவாய், தடாகம், பன்னிமடை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 2 காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வந்தன. அந்த யானைகளுக்கு பொதுமக்கள் விநாயகன், சின்னதம்பி என்று பெயிரிட்டனர். இதில் கடந்த மாதம் 18-ந்தேதி விநாயகன் யானையை வனத்துறையினர் பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட்டனர். அதைத்தொடர்ந்து கடந்த 25-ந் தேதி சின்னதம்பி யானையை வனத்துறையினர் பிடித்து, பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பை அடுத்த வரகளியாறு வனப்பகுதியில் விட்டனர்.
முன்னதாக சின்னதம்பி யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. அதில் உள்ள ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் வனத்துறையினர் சின்னதம்பி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். வரகளியாறில் இருந்த ஓய்வு விடுதி கட்டிடத்தை சேதப்படுத்திய யானை, நேற்று முன்தினம் பகல் 1 மணிக்கு வரகளியாறு பகுதியை விட்டு வெளியே வந்தது. பின்னர் அந்த யானை, கூமாட்டி, பனப்பள்ளம் வழியாக நேற்று அதிகாலை 2 மணிக்கு ஆழியாறு அருகே பந்தகால் அம்மன்பதி பகுதிக்கு வந்தது.
அங்கு சிறிது நேரம் முகாமிட்ட யானை, பொங்காளியூருக்கு காலை 6 மணிக்கு வந்தது. இதை ரேடியோ காலர் மூலம் கண்காணித்த வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனவர்கள் பிரபாகரன், முருகேசன் மற்றும் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்புகள் உள்பட 30 பேர் குவிக்கப்பட்டனர். இதற்கிடையில் யானை அங்கிருந்து கோட்டூர் ஊருக்குள் புகுந்தது.
உடனே வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்ட முயன்றனர். ஆனால் பட்டாசு சத்தத்தை கேட்டு பழக்கப்பட்ட சின்னதம்பி யானை, ஜாலியாக ஒவ்வொரு தெருவாக சுற்றி வந்தது.
ஆனால் எந்தவித சேதத்தையும் ஏற்படுத்த வில்லை. காலை 7 மணிக்கு அங்கலக்குறிச்சி ஜே.ஜே. நகர் வழியாக யானையை தோட்டங்களுக்குள் வனத்துறையினர் விரட்டினர். அங்கு சென்ற யானை, தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த அரசாணிக்காய்களை சாப்பிட்டது. பின்னர் சோளத்தட்டையை சாப்பிட்டு, எந்தவித சேட்டையும் செய்யாமல் யானை வனப்பகுதியை நோக்கி நகர்ந்தது.
இந்த நிலையில் வால்பாறை ரோட்டை கடந்து செல்ல முயன்றது. இதையடுத்து வனத்துறையினர் வால்பாறை சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி, யானை செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். யானையை விடாமல் வனத்துறையினர் பட்டாசு வெடித்தவாறு விரட்டி கொண்டே சென்றனர். இதை தொடர்ந்து 3மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காலை 9 மணிக்கு யானை கோபால்சாமி மலை பகுதிக்கு சென்றது. அதன்பிறகே கோட்டூர், அங்கலகுறிச்சி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். யானை மலை அடிவாரத்தில் நிற்பதால் எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் புகுந்து விட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு உள்ளனர்.
இதற்கிடையில் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து கோபால்சாமி மலை பகுதிக்கு வந்தார். அவர் அங்கிருந்து ரேடியோ காலர் மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்தார்.
அப்போது வனச்சரகர்கள் காசிலிங்கம், மணிகண்டன் மற்றும் பலர் உடன் இருந்தனர். கோவையில் இருந்து பிடித்து வந்து டாப்சிலிப் கொண்டு சென்று விடப்பட்ட சின்னதம்பி யானை ஊருக்குள் புகுந்த சம்பவம் அங்கலகுறிச்சி பகுதியில் நேற்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை அருகே உள்ள பொன்னூத்துமலை, கணுவாய், தடாகம் பகுதியில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு சின்னதம்பி, பெரியதம்பி, விநாயகன், ஊசி கொம்பன் உள்பட 5 காட்டு யானைகள் ஒன்றாக சேர்ந்து சுற்றுவது வழக்கம். இந்த யானைகள் தனியாக சுற்றியதை பார்த்தது இல்லை. அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சாப்பிட்டு நாசப்படுத்தின. இந்த யானைகள் வீட்டிற்குள் ஆட்கள் இருந்தால் ஒன்றும் செய்யாது. எந்த வீடு பூட்டப்பட்டு இருக்கிறதோ அந்த வீட்டை உடைத்து உள்ளே இருக்கும் அரிசி, பருப்பு வகைகளை வெளியே எடுத்து சாப்பிட்டு விட்டு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தியது. இந்த 5 யானைகளும் வேறு கூட்டத்தில் சேராது. அத்துடன் இந்த வனப்பகுதியில் புதிதாக எந்த யானைகளையும் நுழைய விடாது. யானைகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளதாக விவசாயிகள் கூறியதை தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையினர் பெரியதம்பி யானையை பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட்டனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊசி கொம்பன், மற்றொரு யானையும் இறந்தன. இதனால் விநாயகனும், சின்னதம்பி யானையும் ஒன்றாக சுற்றின. விநாயகன் மற்ற யானைகளைவிட உருவத்தில் பெரியதாக இருப்பதால், இதை பார்த்ததுமே மற்ற யானைகள் பயந்து ஓடின. இந்த நிலையில்தான் கடந்த டிசம்பர் மாதத்தில் விநாயகன் யானை இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் தனியாக சுற்றிய சின்னதம்பி யானை, வேறு வழியின்றி குட்டியுடன் இருந்த பெண் யானையை தன்னுடன் சேர்த்துக்கொண்டது. கடந்த 17 ஆண்டாக இந்த யானை இருந்த இடத்தில் இருந்து வனத்துறையினர் அதை பிடித்து வேறு இடத்துக்கு மாற்றம் செய்து உள்ளதால், புதிய இடம் அதற்கு பிடிக்கவில்லை. மேலும் இந்த யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அரிசி, பருப்புகளை சாப்பிட்டு பழகிவிட்டது. மேலும் இது வனப்பகுதிக்குள் எப்போதுமே இருக்காது. மலையடிவார பகுதியை ஒட்டிதான் இருக்கும். இதுவே ஊர்ப்புறங்களுக்கு இந்த யானைவருவதற்கான காரணம் ஆகும்.
இதனால் இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்ட பின்னரும், 17 ஆண்டுகளாக இருந்த தடாகம் பகுதிக்கு வருவதற்காகவே வனப்பகுதியை விட்டுவிட்டு வெளியே வந்து உள்ளது. எனவே இது மீண்டும் அங்கு வர வாய்ப்பு உள்ளது. மேலும் கேரளாவில் உள்ள யானைகள் கோவை கோட்ட வனப்பகுதிக்குள் புகுந்ததும் கணுவாய், தடாகம் வழியாகதான் வேறு பகுதிக்கு செல்லும். தமிழக-கேரள எல்லையில் அகழி, அட்டப்பாடி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மனிதர்களை தாக்கக்கூடிய 5 ஆட்கொல்லி யானைகள் சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் விநாயகன், சின்னதம்பி யானைகளுக்கு பயந்துதான் கோவைக்குள் வராமல் இருந்தன.
தற்போது இங்கு விநாயகன், சின்னதம்பி யானைகள் இல்லாததால், ஆட்கொல்லி யானைகள் கோவை வனப்பகுதிக்குள் வர வாய்ப்பு உள்ளது என்று வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Related Tags :
Next Story