இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு 29,777 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 29 ஆயிரத்து 777 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இதில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், அமைப்பு செயலாளரும், நெல்லை-தூத்துக்குடி ஆவின் தலைவருமான என்.சின்னத்துரை, தி.மு.க.வை சேர்ந்த கிருபாகரன், ரவி, பா.ஜனதா கட்சி செயற்குழு உறுப்பினர் கனகராஜ், செயலாளர் சிவராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், உதவி கலெக்டர்கள் சிம்ரான்ஜித்சிங் கலோன், விஜயா, கோவிந்தராசு, தேர்தல் பிரிவு தாசில்தார் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-9-2018 அன்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான மனுக்கள் பெறப்பட்டன. அதன்படி பெயர் சேர்ப்பதற்காக 30 ஆயிரத்து 262 பேர் மனு கொடுத்தனர். இதில் தகுதி வாய்ந்த 14 ஆயிரத்து 227 ஆண்கள், 15 ஆயிரத்து 541 பெண்கள், 9 திருநங்கைகள் ஆக மொத்தம் 29 ஆயிரத்து 777 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
குடியிருப்பில் இல்லாதவர்கள், இறந்தவர்கள், முகவரி மாறி சென்றவர்கள் மொத்தம் 18 ஆயிரத்து 269 பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் தொகுதியில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 384 வாக்காளர்களும், தூத்துக்குடி தொகுதியில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 472 வாக்காளர்களும், திருச்செந்தூர் தொகுதியில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 359 வாக்காளர்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 229 வாக்காளர்களும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 262 வாக்காளர்களும், கோவில்பட்டி தொகுதியில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 594 வாக்காளர்களும் உள்ளனர். மாவட்டத்தில் 6 லட்சத்து 90 ஆயிரத்து 106 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 12 ஆயிரத்து 98 பெண் வாக்காளர்கள், 96 திருநங்கைகள் ஆக மொத்தம் 14 லட்சத்து 2 ஆயிரத்து 300 வாக்காளர்கள் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியலில் 18 வயது முதல் 19 வயது உடைய இளம் வாக்காளர்கள் 14 ஆயிரத்து 608 பேர் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் 6 ஆயிரத்து 975 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்கள் எந்தெந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அதன்படி அந்த வாக்குச்சாவடிகளில் சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
மாவட்டத்தில் மொத்தம் 1,593 வாக்குச்சாவடிகள் உள்ளன. புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு அடையாள அட்டை விரைவில் வழங்கப்பட உள்ளது. மேலும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத, தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் பெயர் திருத்தம், நீக்கம் செய்ய விரும்புகிறவர்கள் நாளை (அதாவது இன்று) முதல் மனுக்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் அல்லது தாசில்தார் அலுவலகத்தில் வழங்கலாம்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
Related Tags :
Next Story