கோவை மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 9 ஆசிரியர்கள் இடமாற்றம்
கோவை மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 9 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
சூலூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதியம் முறையை கைவிட வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் (ஜாக்டோ- ஜியோ) கடந்த 22-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அரசு விடுத்த எச்சரிக்கையின்பேரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று முன்தினம் முதல் வேலைக்கு திரும்பினார்கள்.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் நேற்று வேலைக்கு திரும்பினார்கள். அவர்களில் 9 பேருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களில் சிலர் இடமாற்ற நோட்டீசு பெறவில்லை என்று கூறப்படுகிறது. 9 பேரில் எத்தனை பேர் இடைநிலை ஆசிரியர்கள்? எத்தனை பேர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் என்று தெரியவில்லை.
இந்த நிலையில் சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் கருமத்தம்பட்டியை சேர்ந்த சரவணகுமார் (வயது 30) என்ற 10-ம் வகுப்பு ஆங்கில ஆசிரியரும், சரவணம்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (50) என்ற மேல்நிலை வகுப்பு கணித ஆசிரியரும் பணியாற்றி வந்தனர். அவர்கள் கடந்த 22-ந் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டதால் 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் இரண்டு ஆசிரியர்களும் நேற்று பள்ளிக்கு வந்தனர். அவர்களை பள்ளி தலைமையாசிரியர் அழைத்து, ‘உங்கள் இருவரையும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இடமாறுதல் செய்துள்ளார்’ என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும், தாங்கள் இந்த இட மாறுதலை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறியதாக தெரிகிறது.
இந்த தகவல் பள்ளி மாணவர்களிடையே வேகமாக பரவியது. அவர்கள் உடனே பள்ளி வளாகத்தில் திரண்டு நின்று 2 ஆசிரியர்களையும் பள்ளியை விட்டு செல்ல விடமாட்டோம் என்று கூறி வகுப்பை புறக்கணித்ததோடு மட்டுமல்லாமல், பள்ளியின் மைதானத்தில் அமர்ந்தனர். பின்னர் “வேண்டும் வேண்டும் ஆசிரியர் திரும்ப வேண்டும்“ என்று எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் கூறுகையில், ‘இட மாறுதல் குறித்து தனக்கு எதுவும் தெரியாது’என்றார்.
இதேபோல அரசூர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த உடுமலைப்பேட்டையை சேர்ந்த வடிவேல் முருகன்(45) என்ற மேல்நிலை வகுப்பு இயற்பியல் ஆசிரியருக்கும் இடமாறுதல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆசிரியர் சரவணக்குமார், வால்பாறை அருகே உள்ள ரொட்டி கடை என்ற பகுதிக்கும், மேல்நிலை வகுப்பு ஆசிரியர் தமிழ்ச்செல்வன் வால்பாறை பகுதியில் உள்ள சோலையாறு என்ற பகுதிக்கும், மற்றொரு ஆசிரியரான வடிவேல் முருகன் சிறுமுகை அருகிலுள்ள பெத்திக்குட்டை என்ற பகுதிக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story