வேப்பனப்பள்ளியில் 500 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா 50 பேர் காயம்


வேப்பனப்பள்ளியில் 500 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா 50 பேர் காயம்
x
தினத்தந்தி 31 Jan 2019 10:15 PM GMT (Updated: 2019-01-31T23:16:30+05:30)

வேப்பனப்பள்ளியில் 500 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டி 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

வேப்பனப்பள்ளி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் ஆண்டுதோறும் எருதுவிடும் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு எருதுவிடும் விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் கர்நாடக மாநிலம் காமசமுத்திரம், கே.ஜி.எப்., பங்காருபேட்டை, தொப்பனப்பள்ளி பகுதிகளில் இருந்தும், ஆந்திர மாநிலம் குப்பம், குடிப்பள்ளி, குடிநாயனப்பள்ளி பகுதிகளில் இருந்தும் மற்றும் பேரிகை, பாகலூர், சூளகிரி, கிருஷ்ணகிரி, பர்கூர், குருபரப்பள்ளி, மகராஜக்கடை, வரட்டனப்பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரித்து கொண்டு வரப்பட்டன.

இதையொட்டி மைதானத்தில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு எருதுவிடும் விழா நடைபெற்றது. அப்போது காளைகள் மைதானத்தில் துள்ளி குதித்து சென்றன. சீறிப்பாய்ந்து சென்ற காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசுகளையும், பதாகைகளையும் ஆர்வமிக்க இளைஞர்களும், மாடுபிடி வீரர் களும் பறிக்க முயன்றனர்.

அதில் சிலர் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தனர். மேலும் விழாவின் போது ஆக்ரோஷமாக ஓடி வந்த சில காளைகள் பொதுமக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். மாடுகள் முட்டியதில் பொதுமக்கள் சிலர் காயம் அடைந்தனர். இந்த விழாவில் மொத்தம் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

விழாவை காண ஆந்திரா, கர்நாடகா மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் வந்திருந்தனர். இதையொட்டி வேப்பனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story