நலவாழ்வு முகாமுக்கு சென்ற நெல்லையப்பர் கோவில் ‘காந்திமதி’ யானை திரும்பி வந்தது 60 கிலோ எடை குறைந்து உற்சாகம்


நலவாழ்வு முகாமுக்கு சென்ற நெல்லையப்பர் கோவில் ‘காந்திமதி’ யானை திரும்பி வந்தது 60 கிலோ எடை குறைந்து உற்சாகம்
x
தினத்தந்தி 31 Jan 2019 10:00 PM GMT (Updated: 31 Jan 2019 7:16 PM GMT)

நலவாழ்வு முகாமுக்கு சென்ற நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானை நேற்று திரும்பி வந்தது. 60 கிலோ எடை குறைந்து யானை உற்சாகமாக காணப்படுகிறது.

நெல்லை,

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் உள்ள யானைகளுக்கு ஆண்டுதோறும் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மேட்டுப்பாளையம் அருகில் வனபத்திரகாளி அம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டியில் கடந்த டிசம்பர் மாதம் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தொடங்கியது.

இதையொட்டி நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் பெண் யானை காந்திமதி முகாமுக்கு புறப்பட்டு சென்றது. முகாமில் பல்வேறு வகையான உணவு வகைகள் வழங்கப்பட்டன. மேலும் யானைகளுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் பயிற்சி முடிந்து காந்திமதி யானை நெல்லைக்கு லாரியில் திரும்பி வந்தது. நேற்று காலை அந்த லாரி நெல்லை சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளிக்கு வந்தது. அங்குள்ள மேடையையொட்டி லாரி நிறுத்தப்பட்டு, பின்னர் லாரியில் நின்று கொண்டிருந்த காந்திமதி யானை, பாகன்கள் உத்தரவுப்படி லாரியை விட்டு மேடைக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து யானைக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் யானை எஸ்.என்.ஹைரோடு வழியாக நெல்லையப்பர் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டது. அப்போது யானை குதூகலத்துடன் வேகமாக நடந்து சென்றது. கோவில் முன்பு யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கோவில் உள்ளே அழைத்து செல்லப்பட்டது.

யானையுடன் பாகன்கள் ராமதாஸ், விஜயகுமார், பாலகிருஷ்ணன் ஆகியோரும் வந்து சேர்ந்தனர். இதுகுறித்து பாகன்கள் கூறுகையில், “காந்திமதி யானை நலவாழ்வு முகாமில் மற்ற யானைகளுடன் நன்றாக பழகி விளையாடியது. குறிப்பாக மயிலாடுதுறை கோவில் யானையான அவையம்மாளுடன் சேர்ந்து தினமும் நடைபயிற்சி மற்றும் உற்சாக குளியல் போட்டது.

யானைக்கு தற்போது 46 வயது ஆகிறது. இதனால் டாக்டர்கள் யானையின் உடல் எடையை குறைக்க பயிற்சி அளித்தனர். நலவாழ்வு முகாமுக்கு செல்வதற்கு முன்னர் காந்திமதி யானை 4,420 கிலோ எடை இருந்தது. தற்போது 60 கிலோ எடை குறைந்து 4,360 கிலோவாக உள்ளது. இந்த ஆண்டு முகாமில் யானைகளுக்கு மட்டுமல்லாமல் பாகன்களுக்கும் விளையாட்டு போட்டிகள், பயிற்சிகள் நடைபெற்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் இருந்து நலவாழ்வு முகாமுக்கு சென்றிருந்த சங்கரன்கோவில் கோமதி, இலஞ்சி வள்ளி, திருக்குறுங்குடி சுந்தரவல்லி ஆகிய யானைகளும் நேற்று திரும்பி வந்தன. 

Next Story