அன்னூர் அருகே கோழிக்கடை உரிமையாளர் மரக்கட்டையால் அடித்துக்கொலை


அன்னூர் அருகே கோழிக்கடை உரிமையாளர் மரக்கட்டையால் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 31 Jan 2019 10:45 PM GMT (Updated: 31 Jan 2019 7:24 PM GMT)

அன்னூர் அருகே கோழிக்கடை உரிமையாளர் மரக்கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

அன்னூர்,

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் சிவசாமி (வயது 47). இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சிவசாமி குடும்பத்துடன் அன்னூர் அருகே கணேசபுரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, அதே பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறார்.

அவர் நேற்று காலையில் நடைபயிற்சிக்கு சென்று விட்டு வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சிவசாமியின் வீட்டுக்குள் நுழைய முயன்றார். உடனே அவரை சிவசாமி தடுத்து யார் நீ என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர் இந்தி மொழியில் சத்தம்போட்டு பேசினார்.

இதையடுத்து சிவசாமி அவரை பிடித்து வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் கொண்டுபோய் விட்டார். பின்னர் அவர் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வாலிபர் மரக்கட்டையால் சிவசாமியை தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையில் தப்பியோட முயன்ற அந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து அன்னூர் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வினோஜ் தத்தா (35) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story