அர்ச்சகர் சாவு எதிரொலி: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு பாதுகாப்பை மேம்படுத்த முடிவு


அர்ச்சகர் சாவு எதிரொலி: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு பாதுகாப்பை மேம்படுத்த முடிவு
x
தினத்தந்தி 1 Feb 2019 3:45 AM IST (Updated: 1 Feb 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தவறி விழுந்த அர்ச்சகர் இறந்த சம்பவத்தின் எதிரொலியாக கோவிலில் பாதுகாப்பை மேம்படுத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நாமக்கல், 

நாமக்கல் கோட்டை சாலையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). அர்ச்சகரான இவர் விடுமுறை நாட்களில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பணிவிடை செய்ய வருவது வழக்கம். அந்த வகையில் குடியரசு தினத்தன்று ஆஞ்சநேயருக்கு பணிவிடை செய்ய வந்தார்.

இங்கு 8 அடி உயரத்தில் பலகையில் நின்று கொண்டு ஆஞ்சநேயருக்கு மலர்மாலை அணிவித்து கொண்டு இருந்தபோது, அவர் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து இறந்தார். இதையடுத்து 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் பூஜை செய்ய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாக அர்ச்சகர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அர்ச்சர்கள் நின்று பணிவிடை செய்யும் பலகையின் அகலத்தை அதிகப்படுத்தவும், கைப்பிடி அமைக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் முடிவு செய்து உள்ளனர்.

இதையொட்டி நேற்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜன், சேலம் மண்டல கோட்ட பொறியாளர் (இந்து சமய அறநிலையத்துறை) வெற்றிவேல், கோவில் செயல் அலுவலர் ரமேஷ் ஆகியோர் ஆஞ்சநேயர் சன்னதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story