‘கஜா’ புயலால் சேதமான வீடுகளுக்கு நிவாரணம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


‘கஜா’ புயலால் சேதமான வீடுகளுக்கு நிவாரணம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 1 Feb 2019 3:45 AM IST (Updated: 1 Feb 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

‘கஜா’ புயலால் சேதமான வீடுகளுக்கு நிவாரணம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வேடசந்தூர் தாலுகா ஆர்.கோம்பை, கோவிலூர், வடுகம்பாடி ஆகிய கிராமங் களை சேர்ந்த மக்கள் கோரிக்கை மனுக்களுடன் வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர் கள், ‘கஜா’ புயலால் எங்கள் கிராமங்களில் 1500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகி இருக்கின்றன.

புயல் சேதம் குறித்து உள்ளாட்சித்துறை சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் வருவாய்த்துறை சார்பில் நடந்த கணக்கெடுப்பில் சேத விவரங்கள் முழுமையாக இடம்பெறவில்லை. ஆனால் மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்துக்கொண்டு நிவாரணம் வழங்கி வருகிறது.

இதனால் எங்கள் கிராமங்களில் தற்போது 600 வீடுகளுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு அளித்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை. இதனாலேயே தற்போது கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறோம் என தெரிவித்தனர்.

மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story