வணிகர் சங்கங்கள் சார்பில் வால்பாறையில் கடைகள் அடைப்பு


வணிகர் சங்கங்கள் சார்பில் வால்பாறையில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 31 Jan 2019 10:15 PM GMT (Updated: 31 Jan 2019 8:25 PM GMT)

வால்பாறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர் சங்கங்கள் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.

வால்பாறை,

வணிகர் சங்கங்கள் சார்பில் வால்பாறை பகுதியை முறைப்படி சுற்றுலா தலமாக அரசு அறிவித்து தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக படகு இல்லம், தாவரவியல் பூங்கா அமைக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் சார்பில் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும். தொழில்வரி, சேவை வரிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கடையடைப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வால்பாறையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. இதனால் வால்பாறை பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இது குறித்து வணிகர் சங்கத்தினர் கூறியதாவது:-

வால்பாறை பகுதி தற்போது வர்த்தக ரீதியாக தற்போது பாதிப்படைந்து உள்ளது. இதற்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் அரசு சார்பில் இல்லாமல் உள்ளது. மேலும் அடிக்கடி வனவிலங்குகள் தாக்குதல்கள் உள்ளன. ஆகவே பொதுமக்களை பாதுகாப்பதற்கு வனத்துறையின் சார்்பில் நிரந்தர தீர்வு காணவேண்டும். அரசுபோக்குவரத்துக்கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் புதிய பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் வால்பாறை பகுதியில் மட்டும் பழுதான பழைய பஸ்களே இயக்கப்படுகின்றன. எனவே வால்பாறை பகுதிக்கும் புதிய பஸ்கள் இயக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்றன. இதற்காக தற்போது முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் முழுமையாக கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். ஆகவே இனியாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story