புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்


புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 Jan 2019 11:00 PM GMT (Updated: 2019-02-01T02:08:42+05:30)

புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயி வலியுறுத்தினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி மற்றும் இலுப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு மூலம் மத்திய அரசு அறிவித்து உள்ள உளுந்துக்கான குறைந்தபட்ச ஆதார விலையான குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரத்து 600-க்கு பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை கொள்முதல் செய்யப்படும். இதில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் நேரடியாக என்னிடம் புகார் தெரிவிக்கலாம். இதில் பதிவு செய்த விவசாயிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாக உளுந்து கொள்முதலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்றார். மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் விவசாயி செல்லத்துரை பேசுகையில், நான் சாகுபடி செய்த வாழைகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு, சாய்ந்து உள்ளது. இதற்கான நிவாரணம் எனக்கு கிடைக்கவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு உங்களுக்கு வாழை அடங்கலில் இல்லை எனக்கூறுகின்றனர். இதற்கு மாற்று ஏற்பாடு செய்து, எனக்கு மற்றும் நிவாரணம் கிடைக்காத வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வைக்கோல் கட்டும் எந்திரத்தை வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்க வேண்டும். வாழை, பலா போன்ற ஊடுபயிர்களை அடங்கலில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விவசாயி மீசா.மாரிமுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனை குளங்கள், வரத்துவாரிகள் புதிதாக வெட்டப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் வரத்துவாரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை பாதுகாக்க வேண்டும் என்றார்.

விவசாயி சோமையா, புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை, அவர்கள் வங்கியில் வாங்கியுள்ள கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்காக பிடித்தம் செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

விவசாயி தனபதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழையளவு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, உடனடியாக நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். புயலால் சேதமடைந்து உள்ள கோழி பண்ணை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயி நடராஜன், புயலால் பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை போதுமானதாக இல்லை. எனவே கூடுதல் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயி காந்தி, விடுபட்ட தென்னை விவசாயிகளுக்கு உடனடியாக புயல் நிவாரண தொகை வழங்க வேண்டும். புதிய தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்ய நிதியுதவி வழங்க வேண்டும்.

விவசாயி கோவிந்தராஜ், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களின் விவசாய கடன்கள், கல்வி கடன்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். குளத்தூர் தாசில்தாரை காணவில்லை. அவர் உடனடியாக பணிக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

இதற்கு கலெக்டர் பதில் அளித்து பேசுகையில், குளத்தூர் தாசில்தார் தேர்தல் பயிற்சிக்காக டெல்லிக்கு சென்று உள்ளார் என்றார். தொடர்ந்து விவசாயி கோவிந்தராஜ், தாசில்தார் அலுவலகத்தில் கேட்டால், அவர் எப்போது பணிக்கு வருவார் என தெரியாது என்கின்றனர் என்றார். தொடர்ந்து விவசாயிகள் பலர் பேசினர்.

திருந்திய நெல் சாகுபடி திட்டத்தின் கீழ் அதிக மகசூல் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு பரிசு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை பெற்றதை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு செட்டியாபட்டியை சேர்ந்த விவசாயி சேவியரை கலெக்டர் கணேஷ் பாராட்டி, சால்வை அணிவித்தார். தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் பாராட்டினார்கள். தொடர்ந்து சேவியர் தான் எவ்வாறு திருந்திய நெல் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்றேன் என்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் சுப்பையா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோமதிலிங்கம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மிருணாளினி உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story